மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.


அமேசான் அதிரடி அறிவிப்பு:


இந்த நிலையில், கடந்த மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.


2019-ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை பெருவாரியாக மத்திய அரசு நிறுத்திவிட்டதாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது.


இந்த நிலையில், மத்திய அரசு நிர்ணயித்த கால அவகாசம் வரும் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், இணைய வழி பொருட்கள் விநியோக நிறுவனமான அமேசான் அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ”அமேசான் தற்போது வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொண்டு வருகிறது. இருப்பினும், வரும் 19-ஆம் தேதிக்கு பிறகு அமேசான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணம் கொடுத்து பொருட்களை டெலிவரி பெறும் வாடிக்கையாளர்களிடம் ஏற்றுக்கொள்ளாது” என்று அறிவித்துள்ளது.


2 ஆயிரம் நோட்டுகள்:


அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களின் சேவையை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் எனப்படும் இணையவழி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்கிறார்கள். 2 ஆயிரம் நோட்டுகள் பெருவாரியாக வங்கிக்கு திரும்பிவிட்டதால், பொருட்களை பெறும்போது பணத்தை கையில் வழங்கும் வாடிக்கையாளர்களுக்கும் அமேசானின் இந்த அறிவிப்பால் சிரமம் இருக்காது என்று கருதப்படுகிறது. இரு்ப்பினும், நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் முன்கூட்டியே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதை நிறுத்துவதாக அறிவித்திருப்பது வாடிக்கையாளர்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி நிலவரப்படி, இதுவரை 3.32 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 2 ஆயிரம் நோட்டுகள் வெறும் 7 ஆண்டுகளிலே திரும்ப பெறப்பட்டது மத்திய அரசின் மீது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக, பொருளாதார நிபுணர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை பதிவு செய்திருந்தனர். 


கடந்த 2019-ஆம் ஆண்டே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதையே மத்திய அரசு மிகவும் தாமதமாகவே அறிவித்ததற்கும் பொருளாதார நிபுணர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கலவையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 


மேலும் படிக்க: Aadhar Free Update: செம சான்ஸ் மக்களே! ஆதார் அப்டேட் செய்யாம இருக்கீங்களா? கால அவகாசம் நீட்டிப்பு..நோட் பண்ணிக்கோங்க!


மேலும் படிக்க: UPI Payment: வாய்ஸ் நோட் முதல் கடன் வரை: யுபிஐ செயலியில் வந்த அதிரடி மாற்றங்கள்...நோட் பண்ணிக்கோங்க!