ஆந்திரப் பிரதேச மாநிலம் குர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜானவி கண்டுலா. இவர், அமெரிக்கா சியாட்டில் நகரில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் நடந்த விபத்தில் இவர் உயிரிழந்தார்.


அமெரிக்காவில் இந்திய மாணவி மரணம்:


இந்த நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் சியாட்டில் காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், இந்திய மாணவி ஜானவி உயிரிழந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் கிண்டல் அடித்து பேசியது பதிவாகியிருந்தது. விபத்தைப் பற்றி பேசி சிரிக்கும் காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரர், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த தனது சக காவல்துறை அதிகாரி கெவின் டேவ் மீது குற்றவியல் விசாரணை தேவையில்லை என்று கூறுகிறார்.


இது, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியிலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியா வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பி. ரோ கண்ணா, இதுகுறித்து குறிப்பிடுகையில், "ஜானவி கந்துலா இந்தியாவில் இருந்து பட்டதாரி படிப்புக்காக இங்கு வந்துள்ளார். 


கிண்டல் அடித்த போலீஸ்:


சாலையில் நடந்த வந்த அவர் மீது வேகமாக வந்த போலீஸ் கார் மோதியதில் அவர் கொல்லப்பட்டார். அவரின் உயிருக்கு குறைந்து மதிப்பே இருப்பதாக அதிகாரி ஆடரர் கூறுகிறார். 20 வயதில் இங்கு வந்த என் அப்பாவை நினைத்துப் பார்த்தேன். புலம்பெயர்ந்து வந்த ஒவ்வொரு இந்தியரின் உயிருக்கும் எல்லையற்ற மதிப்பு உள்ளது" என்றார்.


இதுகுறித்து இந்தியா வம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபால் குறிப்பிடுகையில், "இது பயங்கரமான சம்பவம். ஜானவி கந்துலாவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இதில், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.
 
இந்த விவகாரத்தை கையில் எடுத்த இந்திய தூதரகம், அமெரிக்க அரசிடம் முறையிட்டது. ஜானவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதும், வீடியோவில் கேலி செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தூதரகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.


சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம், இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில், "சியாட்டிலில் ஜனவரி மாதம் நடந்த சாலை விபத்தில் ஜானவி கந்துலாவின் மரணத்தை கையாண்ட விதம் தொடர்பான சமீபத்திய செய்திகள் கவலையளிக்கின்றன.






சியாட்டில் மற்றும் வாஷிங்டனில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடமும், வாஷிங்டன் டிசியில் உள்ள மூத்த அதிகாரிகளிடமும், இந்த துயரமான வழக்கில் தொடர்புடையவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்த வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளோம்" என பதிவிடப்பட்டுள்ளது.