"பாரத் (BH – தொடர்)" இன் கீழ் புதிய வாகனங்களுக்கான புதிய பதிவு முத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்க இந்த முறை அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு நகர்வதை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வாகனப் பதிவு முறையை இலகுவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் வாகனப் பதிவு முறையை டிஜிட்டலாக்கி, சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம்." எனத் தெரிவித்து உள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு பணியிட மாறுதல் பெற்று செல்லும்போது பல்வேறு இடர்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 47-ன் கீழ் பணிமாறுதல் பெறும் மாநிலத்தில் தன்னுடைய வாகனத்தை மீண்டும் பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. பதிவு செய்யாத வாகனத்தை 12 மாதங்களுக்கு மேல் வேறு மாநிலத்தில் வைத்திருக்க முடியாது.
பணியிட மாறுதல் பெற்று உள்ள மாநிலத்திலும் அவ்வளவு எளிதில் புதிய வாகனப் பதிவை செய்துவிட முடியாது. வாகனம் வாங்கி ஏற்கனவே பதிவு செய்து இருந்த மாநிலத்திடம் இருந்து வாகனப் பதிவு எண்ணை மாற்றுவதற்காகவும், சாலை வரி கட்டியதை உறுதி செய்து அதை மீண்டும் கேட்டுப் பெறுவதற்காகவும் தடை இல்லா சான்று வாங்க வேண்டும். இதில் குறிப்பாக சாலை வரியை ஒரு மாநிலத்திடம் இருந்து திரும்பப்பெற்று வேறு மாநிலத்திடம் செலுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இத்தகைய சிரமங்களை வாகன உரிமையாளர்கள் சந்திக்காமல் இருக்க புதிய வாகன பதிவு முறையை அறிமுகம் செய்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. BH என்ற இந்த புதிய பதிவு எண்ணை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் ஒருமாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கும் இடம் பெயரும்போது மீண்டும் வாகனப்பதிவு செய்யத்தேவை இல்லை.
ராணுவ வீரர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், 4 மாநிலங்களில் கிளைகளை கொண்டு உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் விருப்பப்பட்டால் BH என்ற புதிய வாகனப்பதிவு எண்ணை பயன்படுத்தலாம் என்ற மத்திய சாலை போக்குவரத்துறை தெரிவித்து உள்ளது.
ஆனால், BH எனத் தொடங்கும் இந்த வாகன பதிவு எண்ணை பல்கேரியா நாடு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் முக்கியச் செய்திகளை அறிய...
ABP நாடு அடுத்தடுத்த செய்திகள் அறிய... இங்கே க்ளிக் செய்யவும்!
Car loan Information:
Calculate Car Loan EMI