ஹூண்டாய் மோட்டார் 25 ஆண்டுகள்


இந்தியாவில் தன்னுடைய 25 ஆண்டினை கொண்டாடுகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். சமீபத்தில் 1 கோடியாவது  காரினை தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார்.  (2018-ம் ஆண்டு 80 லட்சமாவது கார் வெளியனது. 2019-ம் ஆண்டு 90 லட்சமாவது கார் வெளியானது) இந்திய ஆட்டோமொபைல் துறையில் உள்ள மொத்த சந்தையில் அசைக்க முடியாத முதல் இடத்தை மாருதி பிடித்திருக்கிறது. 47 சதவீத சந்தையை வைத்திருக்கிறது. அதே சமயத்தில் ஹூண்டாயின் இரண்டாவது இடத்தையும் அசைக்க முடியாது. ஹூண்டாய் வசம் 17 சதவீத சந்தை இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் டாடா 8 சதவீத சந்தை மட்டுமே வைத்திருக்கிறது.


1996-ம் ஆண்டு இந்தியாவில் அடிக்கல் நாட்டியது ஹூண்டாய். அப்போது இந்தியாவில் 80 சதவீதத்துக்கு மேலான் சந்தையை மாருதி வைத்திருந்தது. டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் இருந்தாலும் பெரிய சந்தை இல்லை. ஹூண்டாய் வருவதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் போர்டு, ஜிஎம் உள்ளிட்ட நிறுவனஙகள் இந்திய சந்தைக்கு வந்தன.


அதுவரை இந்தியாவில் இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே செயல்பட்டன. மாருதி மற்றும் போர்டு நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்தே செயல்பட்டன. ஆனால் இதனால் முடிவெடுப்பதில் சிக்கல், கால தாமதம் கருத்து வேறுபாடு என பல இருந்ததால் முழுமையான துணை நிறுவனமாகவே கால்பதிக்க விரும்பியது ஹூண்டாய். இதனால் பல கட்டத்தை தாண்டி முழுமையான நிறுவனமாக செயல்பட மத்திய அரசு அனுமதி 1996-ம் ஆண்டு அனுமதி கொடுத்தது.


அதுவரை யாருக்கும் இதுபோன்ற அனுமதி கொடுக்கப்பட்டதில்லை. வெளிநாட்டு உரிமைக்கு கடும் கட்டுப்பாடு இருந்தது. இந்திய நிறுவனத்துடன் இணைந்தால் விரைவில் அனுமதி கிடைக்கும் சூழல் இருந்தாலும் நீண்ட கால நோக்கில் அதனை மறுத்துவிட்டது ஹூண்டாய்.


ஏன் சென்னை?


எங்கு ஆலையை அமைக்கலாம் என சந்தை பகுப்பாய்வை செய்தது ஹூண்டாய். அதில் மும்பை, டெல்லி, பூணே, சென்னை உள்ளிட்ட நகரங்களை பரிசீலனை செய்தது. பூணே மற்றும் சென்னை அடுத்தகட்ட பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதியாக துறைமுகமும், மனிதவளமும் இந்த புராஜக்டை சென்னைக்கு கொண்டுவந்தது. இந்திய சந்தை மட்டுமல்லாமல் ஏற்றுமதியையை ஹூண்டாய் செய்யும் திட்டம் இருந்ததால் சென்னையை தேர்வு செய்தது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களை இதுவரை ஹூண்டாய் ஏற்றுமதி செய்திருக்கிறது.




தவிர 1996-ல் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் கல்லூரிகள் இருந்தன. அரசும் போதுமான உதவியை செய்ததால் 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது ஆட்டோமொபைல் மையமாக சென்னை இருப்பதற்கு ஹூண்டாயும் ஒரு காரணம். கொரியாவுக்கு அடுத்து ஹூண்டாய் கார் ஆலை சென்னையில் தொடங்கப்பட்டது.


கார் நிறுவனங்கள் என்று மட்டுமில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் பல இந்தியாவில் தோற்பதற்கு முக்கிய காரணம் இந்தியா என்பது ஒரே நாடாக இருந்தாலும் அனைத்து பகுதியும் ஒன்று போல் இருப்பதில்லை. பல மொழி பேசிபவர்கள், பல கலாசாரத்தை பின்பற்றுபவர்கள், பல மதங்களை பின்பற்றுபவர்கள், பல தொழில்களில் இருப்பவர்கள் என பல படிநிலைகளில் மக்கள் உள்ளனர். வருமானமே இல்லாமல் இருப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள். இந்தியாவை புரிந்துகொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. அதனால் வெளிநாட்டில் இருந்து தலைமைச் செயல் அதிகாரியை இறக்காமல் டாடா மோட்டார்ஸில் பணியாற்றிய பிவிஆர். சுப்புவை முக்கிய பொறுப்பில் ஹூண்டாய் நியமனம் செய்தது. ( இவர் தற்போது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்)  பிவிஆர். சுப்பு தலைமையில் தான் பிரபல மாடாலான சான்ட்ரா  அறிமுகம் செய்யப்பட்டது.  1998-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி முதல் கார் வெளியானது. சந்தையில் இருந்து விலக்கிகொள்ளப்பட்ட சாண்ட்ரா சில ஆண்டுகளுக்கு (2018) முன்பு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.




புராஜெட்களில் செலுத்திய கவனத்தை விளம்பரத்திலும் செலுத்தியது. தற்போது பல நிறுவனங்களுக்கு ஷாருக்கான் விளம்பர தூதர். சாண்ட்ரோவின் முதல் விளம்பர தூதரே ஷாரூக்கான்தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹூண்டாய் உடன் இணைந்திருக்கிறார்.


புதிய கார்கள்


ஹூண்டாய் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் தொடர்ந்து மாடல்களை அறிமுகப்படுத்துவதுதான். சீரான இடைவெளியில் புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்வது மற்றும் தொடர்ந்து சந்தையை விரிவாக்கம் செய்ததுதான் காரணம். சாண்ட்ரோ, அசெண்ட், வெர்னா, கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, கிரெடா, எலெண்டரா என தொடர்ந்து புது புது மாடல்களை, புதிய பிரிவுகளையும் அறிமுகம் செய்தது. சமீபத்தில் கூட அல்கசார் என்னும் மாடலை அறிமுகம் செய்தது.


ஆகஸ்ட் மாதத்தில் அதிக விற்பனையான கார்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் க்ரெடா இருக்கிறது.


இதுவரை 400 கோடி டாலருக்கு மேல் ஹூண்டாய் இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறது. ஆண்டுக்கு 7.5 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஆலையாக செயல்படுகிறது. தொடர்ந்து புதிய மாடல்களுக்கான திட்டமும் இருக்கிறது. நெக்ஸோ, டக்சன், கோனா எலெக்ட்ரிக் உள்ளிட்ட மாடல்கள் அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆகஸ்ட் வரையிலான திட்டம் இப்போதே தயார் செய்து வைத்திருக்கிறது ஹூண்டாய்.


இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போதே போர்டு மோட்டார் இந்திய பிரிவை மூடுவதாக அறிவித்தது. 2017-ம் ஆண்டே ஜெனரல் மோட்டார்ஸ் வெளியேறியது. பல நிறுவனங்கள் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ள போராடி வரும் சூழலுடன் ஒப்பிட்டால் 25 ஆண்டு கால ஹூண்டாய் பயணம் தற்செயலாக நடந்திருக்காது.


Dubai Expo 2020: பிரமாண்டத்தின் உச்சம் : 6 மாதக் கண்காட்சிக்கு 5 வருடம் தயாரான துபாய்!


Car loan Information:

Calculate Car Loan EMI