உலகத்தின் 191 நாடுகள் ஒரே இடத்தில் கூடும் பிரமாண்டத் திருவிழாவுக்காகத் தயாராகி வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். இன்னும் ஒரு மாதத்தில் துபாய் எக்ஸ்போ 2020 தொடங்க உள்ள நிலையில் அதற்கான கவுன்டவுனை அறிவித்துள்ளார் அந்த நாட்டுப் பிரதமர் ஷேக் முகமது. 






கண்காட்சிக்காக ஒரு மாநிலம்: 


கண்காட்சி நடக்கும் பகுதி மட்டும் சுமார் 1083 ஏக்கரில் தயாராகி வருகிறது. அபுதாபிக்கும் துபாய்க்கும் நடுவே ஒரு பெரிய பாலைவனத்தையே கையகப்படுத்தியுள்ளனர். அந்த பாலைவனத்தில் கண்காட்சிக்கான ஒரு நகரத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. வாய்ப்பு, இயங்குதல் மற்றும் நிலைத்தன்மைதான் இந்த கண்காட்சிக்கான தீம். இதை மையமாக வைத்து அந்த நகரத்துக்குள் மூன்று மாவட்டம் மூன்று மாவட்டத்துக்கும் அதற்கான நிர்வாகிகள், அந்த நிர்வாகிகளுக்கு எனத் தனித்தனியே பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ள சப் தீம்கள் என கண்காட்சிக்காக ஒரு அமீரகம் ஐந்தாண்டு உழைப்பில் ஒரு குட்டி மாநிலத்தையே உருவாக்கியுள்ளது எனலாம்.



அமீரகத்தில் அந்நிய முதலீட்டை அந்த நாட்டுப் பிரதமர் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் நிலையில் இந்த எக்ஸ்போ அதற்கான தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொருளாதார வளர்ச்சி, ரியல் எஸ்டேட், சுற்றுச்சூழல் மண்டலங்கள் மற்றும் பொதுத்துறை சார்ந்து முதலீடுகளை ஊக்கப்படுத்தி வருகிறது அமீரகம்.  இந்தக் கண்காட்சியை தொடக்கமாகக் கொண்டு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரிக்க அந்த நாடு திட்டமிட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை ஒட்டி உலகின் மிகப்பெரிய சூரியசக்தி திட்டம் ஒன்றிலும் துபாய் முதலீடு செய்துள்ளது. இதுதவிர துபாயின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு மொத்தம் 82 புதிய திட்டங்களை இந்தக் கண்காட்சி சேர செயல்படுத்த உள்ளது அமீரகம்.


ஐந்து வருட உழைப்பு: 


முதலில் இந்த உலகக் கண்காட்சி 20 அக்டோபர் 2020 முதல் 10 ஏப்ரல் 2021 வரையிலான ஆறு மாத காலத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெருந்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.  பின்னர் 1 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் மார்க்கெட்டிங் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு எக்ஸ்போ 2020 என்றே பெயரிட்டுள்ளது அமீரகம். சர்வதேசக் கண்காட்சியை நடத்து பிரான்ஸின் சர்வதேசக் கண்காட்சிகள் கூட்டமைப்பு (BIE) 2013ம் ஆண்டே 2020ம் ஆண்டில் கண்காட்சி நடைபெறும் இடத்தை அறிவித்திருந்தது. அதையடுத்து 2016ம் ஆண்டு தொடங்கி இதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியது அரபு நாடு. இதுபோன்ற சர்வதேசக் கண்காட்சிகள் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படும் நிலையில் ரத்து செய்யப்படாமல் தேதி தள்ளிவைக்கப்பட்டு நடைபெறுவது இதுவே முதல்முறை. எல்லாம் ஐக்கிய அரபு நாடுகளிடம் கொட்டிக் கிடக்கும் தங்கக்கட்டிகளின் திருவிளையாடல் என வாய்பிளக்கின்றனர் சோஷியல் மீடியா சிட்டிசன்கள்.




ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், க்ரோஷியா,இந்தியா என மொத்தம் 191 நாடுகள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்கின்றன. பங்கேற்கும் 191 நாடுகளுக்கும் ஒவ்வொரு தீமில் ஒரு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு இத்தாலிக்கு மைக்கெலேஞ்சலோ ஓவியங்களைக் கொண்ட நகரம், எகிப்து நாட்டுக் கண்காட்சி நடக்கும் இடத்தில் பாரோ மன்னர்களின் மூன்று ஒரிஜினல் சிலைகள், மொரிஷியஸுக்கு அவர்களது தேசியப் பறவையான டோடோவின் பிரமாண்ட உருவம் பொறித்த தீம், 


இந்தியாவுக்கு என்ன ஸ்பெஷல் தெரியுமா? 


இந்தியாவின் கண்காட்சி அரங்க நுழைவு வாயிலில் பிரமாண்ட காந்தி சிலை வடிவமைக்கப்பட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது வேறுபட்ட கலை, கலாசாரம், பன்னோக்குச் செயல்பாடுகள் குறித்து அந்த அரங்கத்தில் காட்சிப்படுத்த உள்ளது.


இந்த எக்ஸ்போ சர்வதேச நாடுகள் உடனான அமீரகத்தின் உறவை பலமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.