டாடா நிறுவனம் எப்போது வாடிக்கையாளர்களை கவர புதிய கார்களை செய்து சந்தையில் இறக்கி வருகிறது. டாடா நானோ கார் வந்த போது அந்த காருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் அந்த காரின் விலை மிகவும் குறைவாக இருந்தது தான். அதன்பின்னர் டாடா நிறுவனத்தின் பல வகை கார்கள் சந்தையில் பெரும் வரவேற்பை பெற தொடங்கின. 


இந்நிலையில் தற்போது டாடா நிறுவனம் தன்னுடைய அடுத்த புதிய காரை சந்தையில் இறக்க உள்ளது. இந்த காருக்கு டாடா பன்ச் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது எஸ்யுவி ரக கார் என்பதால் இதற்கும் அதிகளவில் வரவேற்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்தக் காரின் சிறப்பு அம்சங்கள் தொடர்பாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கார் டாட்டா நிறுவனத்தின் நெக்சான் மற்றும் ஹாரியர் ரக கார்களை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது நெக்சான் காரில் உள்ளது போல் கிளாசி பேனல் மற்றும் ஹாரியர் காரில் உள்ளது போல் ஹெட் லைட் ஆகியவை இதிலும் இடம்பெற்று உள்ளது. 




ஹெட் லைட் உடன் சேர்ந்து ஃபாக் லைட் மற்றும் 15 இன்ச் அல்லாய் வீல் ஆகியவை பன்ச் காரில் இடம்பெற்றுள்ளன. டியல் டோன் நிறமும் இந்தக் காரின் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காரின் கதவில் இருக்கும் ஹெண்டிலும் காரின் நிறத்தில் வர உள்ளது. இவை தவிர பெயருக்கு ஏற்றது போல் இந்த கார் ஒரு நல்ல சக்தி வாய்ந்த எஞ்சினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இந்த கார் தொடர்பாக டாடா விற்பனை குழுமத்தின் சைலேஷ் சந்திரா, “டாடா பன்ச் ரக காரில் நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான அம்சங்கள் இடம்பெற உள்ளது. இந்த கார் நல்ல வடிவம், தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான தரம் ஆகியவற்றின் கலவையாக அமைந்திருக்கும். எஸ்யுவி ரக கார் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற நல்ல ஒரு காராக இது அமையும். அத்துடன் நகரத்தில் எளிதாக பயன்படுத்த கூடிய அளவில் இது இருக்கும். எங்களுடைய எஸ்யுவி குடும்பத்தில் இது நான்காவது கார் என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார். 


டாடா நிறுவனம் சார்பில் ஏற்கெனவே டாடா நெக்சான், டாடா ஹாரியர், டாடா சாஃபாரி ஆகிய மூன்று எஸ்யுவி கார்கள் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக டாடா பன்ச் இந்த ரகத்தில் இணைய உள்ளது. டாடா நிறுவனத்தின் எஸ்யுவி கார்களில் மிகவும் சிறிய காராக டாடா பன்ச் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கார் தீபாவளி பண்டிகையின் போது சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவைதான்: விலை லிஸ்ட் இதோ!


Car loan Information:

Calculate Car Loan EMI