தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் விஜயை இயக்கியதும் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்குகிறார் அட்லீ. இந்த செய்தி வந்ததிலிருந்தே அதன் மீதான பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதுவும் பிகில் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகியும் ஷாருக்கானுடனான திரைப்படம் குறித்து செய்திகள் எதுவும் வராததால் திரைப்படம் குறித்த பல யூகங்களை சமூக வலைத்தளங்களில் விவாதித்துக்கொண்டிருந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீப காலங்களில் அத்திரைப்படம் குறித்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சில நாட்கள் முன்னர் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் இருக்கிறார் என்ற செய்தி வந்ததும், தமிழ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அதை தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பெயரும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர தொடங்கியது. சன்யா மல்ஹோத்ரா இணைவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. தற்போது புதிதாக ஒரு பாலிவுட் நடிகரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
காப்பார் இஸ் பேக், பாரத், படாகா போன்ற திரைப்படங்களில் நடிப்பிற்காக வெகுவாக பராட்டப்பெற்ற நடிகர் சுனில் குரோவர் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். ஏற்கனவே அட்லீ - ஷாருக் இணைகிறார்கள் என்று அறிவித்த நாள் முதல் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடி வரும் இந்த திரைப்படத்தை ஆக்ஷன் நிறைந்த திரைக்கதையுடன் உருவாக்க இருக்கிறார்கள். ஷாருக்கான், நயன்தாரா, சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் ஆகியோர் இணைகிறார்கள் என்ற செய்தி போக, இன்னும் பலர் பாலிவுட்டிலிருந்தும், கோலிவுட்டிலிருந்தும் இணைய இருக்கிறார்கள் என்று வட்டாரம் தெரிவிக்கிறது.
அட்லீ, ஷாருக்கை இயக்க நயன்தாரா நடிக்கிறார் என்கிறது தமிழ்நாட்டிலிருந்து அடுத்ததாக அதிகம் எதிர்பார்க்கப்படும் பாலிவுட் திரைப்படமாக மாறிவிட்டது, அதனால் மேலும் தமிழ் நடிகர்கள் திரைப்படத்தில் இணைவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு இரட்டை வேடம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இதுவரை பெயர் சூட்டப்படாத இந்த திரைப்படத்தை ரெட்சில்லி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் ஹை-பட்ஜெட் திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது
ஏற்கனவே திரைப்படத்தின் ப்ரி-புரொடக்ஷன் வேலைகள் அதி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் ஷூட்டிங்கும் தொடங்க உள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் படத்தின் வேலைகளில் இருக்கும் ஷாருக்கும் அதன் வேலைகள் முடிந்தவுடன் இத்திரைப்படத்தின் வேலைகளில் இணைவார் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கிறார்கள். அது முடிந்ததும் கூடியவரை அக்டோபாரில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு ஆக்ஷன் திரைப்படங்களையும் முடித்ததும் ஷாருக்கான், ராஜ்குமார் ஹிராணி இயக்கும் நகைச்சுவை திரைப்படத்தில் இணைவார். பதான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் சிக்ஸ் பேக் வைத்து நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் அட்லீ இயக்கும் படத்தில் சிக்ஸ் பேக்குடன் நடிப்பதற்காக வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் இன்னும் வெளிவரவில்லை.