கொரோனா முதல் அலையின்போது கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், நவம்பர் மாதம் 50 சதவிகித இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதித்திருந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை பரவியதால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டது. தற்போது 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டபோது தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு திறப்பு அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் திரையரங்கு ஊழியர்களுக்கு தடுப்பூசிபோடும் பணியை முன்பே தொடங்கி விட்டோம். இதுவரை 90 சதவிகித ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. மேலும் திரையரங்கு ஊழியர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனையும் செய்யப்படும்என்றனர்.
மேலும் படம் பார்க்க வரும் ரசிகர்கள் பயன்படுத்தும் விதமாக ஒவ்வொரு வகுப்பு நுழைவு வாயிலும் சானிடைசர் வைக்கப்படும். ஒவ்வொரு காட்சியின் இடைவெளியிலும் திரையரங்கு முழுவதும், சானிடைசர் தெளிக்கப்படும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும், கழிப்பிடங்களை போதிய சமூக இடைவெளியுடன் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும். திரையரங்கில் உள்ள இருக்கைகளில் சமூக இடைவெளிக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா விழிப்புணர்வு படங்கள், ஸ்லைடுகள் திரையிடப்படும். ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கிற்கு முன்னுரிமை தரப்படும். இதுபோன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
புதிய படங்கள் எதுவும் வராத காரணத்தினால் திரையரங்குகள் திறக்கப்படவில்லை, மேலும் கொரோனா அச்சத்தில் மக்கள் இருப்பதால் திரையரங்கிற்கு வருவார்களா என சந்தேகம் உள்ளது. ஆகையால் வரும் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என தெரிவித்தனர். திரையரங்குகள் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றி 50 சதவிகித இருக்கைகளை வசதிகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கு ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு பணிக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் புது படங்கள் வருவதைப் பொறுத்து திரையரங்கள் திறக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். புதிய திரைப்படங்கள் வெளிவராததால் திருச்சி மாநகரில் உள்ள 17 திரையரங்குகள் திறக்கப்படவில்லை, இந்த காரணத்தினால் நீண்ட நாட்களுக்குப்பின் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.