Upcoming KIA SUV EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில், தலா இரண்டு எஸ்யுவி மற்றும் மின்சார கார்களை கியா அறிமுகப்படுத்த உள்ளது.
கியாவின் விரிவாக்க திட்டம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி, தனது போர்ட்ஃபோலியோவை விரிவாக்க கியா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதில் மிகவும் முக்கியமானதாகவும், கவனிக்கக் கூடியதாகவும் மின்சார வாகன பிரிவு உள்ளது. அதன்படி, பிரீமியம் மின்சார எஸ்யுவிக்களை அடுத்தடுத்து சந்தைப்படுத்த கியா நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே EV6 மற்றும் EV9 ஆகிய கார் மாடல்கள் விற்பனையில் உள்ளன. இந்நிலையில் புதியதாக இணைய உள்ள கார் மாடல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1. கியா கிளாவிஸ் EV
புதிய கிளாவிஸ் EV மூலம், கியா நிறுவனம் இந்தியாவின் வெகுஜன சந்தை மின்சார வாகன பிரிவில் அறிமுகமாக உள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி அடுத்த மாதம் அதாவது ஜுலை மாதம் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம். இந்த மின்சார மல்டி பேசஞ்சர் வெஹைகிள் ஆனது, இன்ஜின் அடிப்படையிலான கிளாவிஸிலிருந்து டிசைனை கடன் வாங்கியுள்ளது. அதேநேரம், மின்சார எடிஷனுக்கான தனித்துவமான சில டச்களையும் பெற்றுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த கார் சோதனை ஓட்டத்தின்போது பொதுமக்களாலும் காணப்பட்டுள்ளது. ஹுண்டாய் கிரேட்டா மின்சார எடிஷனில் உள்ள பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை, புதிய கிளாவிஸ் எடிஷன் பயன்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த கிளாவிஸ் காரானது 400 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என்றும், இதன் விலை ரூ.22 முதல் ரூ.26 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
2. கியா சிரோஸ் EV
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிரோஸ் கார் மாடலின் அறிமுகம் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கதில் இது சந்தைப்படுத்தப்படலாம். சிரோஸ் மின்சார எடிஷனானது, திருத்தப்பட்ட பம்பர், புதிய ஏரோ எஃபிஷியண்ட் அலாய் வீல்கள் மற்றும் EV-க்கான தனித்துவமான பிராண்டிங் கொண்டிருக்கும். இதன் பேட்டரி விவரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாவிட்டாலும், இதுவும் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரேஞ்ச் அளிக்கும் திறனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சிரோஸ் மின்சார எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டால், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திராவின் XUV400 ஆகிய மின்சார எடிஷன்களுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. இதன் விலை ரூ.14 லட்சம் தொடங்கி ரூ.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
3. புதிய தலைமுறை கியா செல்டோஸ்
சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் புதிய தலைமுறை செல்டோஸ் கார் மாடலானது, நடப்பாண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டில் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் உற்பத்தி இறுதிகட்டத்தில் உள்ளது. சோதனை மாதிரிக்கான பல புகைப்படங்களும் ஏற்கனவே இறுதியில் வெளியாகியுள்ளன. SP3i என்ற கோட்நேமில் உருவாகி வரும் இந்த காரானது, புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்ட்ரெயினை கொண்டுள்ளது. அதேநேரம், ஏற்கனவே இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் தொடர உள்ளது. ஹைப்ரிட் செல்டோஸ் ஆனது பிரபலமான, 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின், வலுவான ஹைப்ரிட் செட்-அப்பை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய எடிஷன் இந்திய சந்தையில் மாருதி பிரேஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஹுண்டாய் வென்யு ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிட்டு வருகிறது.
4. கியா 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி
கியா நிறுவனம் இந்திய சந்தைக்காக முற்றிலும் புதிய 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவியை தயாரித்து வருகிறது. MQ4i என்ற கோட்நேமில் உருவாக்கப்படும் இந்த காரானது, சொரெண்டோ என்ற பெயரில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் எஸ்யுவியை அடிப்படையாக கொண்டுள்ளது. புதிய 7 சீட்டர் ஆனது இந்திய சந்தையில் 2027ம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது வலுவான ஹைப்ரிட் செட்-அப் உடன் இனைக்கப்பட உள்ளது. இதே ஹைப்ரிட் தொழில்நுட்பம் தான், அடுத்த தலைமுறை செல்டோஸிலும் பகிரப்பட உள்ளது. கியாவின் புதிய 7 சீட்டரானது செல்டோஸிற்கு மேலே நிலைநிறுத்தப்பட்டு, இந்தியாவில் மஹிந்திராவின் XUV700 மற்றும் டாடா சஃபாரி கார் மாடல்களுடன் போட்டியிடும்.
Car loan Information:
Calculate Car Loan EMI