Indias First Tesla Showroom: இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் முதல் ஷோ ரூம், டெல்லி மற்றும் மும்பையில் அமைவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் டெஸ்லா ஷோ-ரூம்:
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின், இந்தியாவிற்கான முதல் ஷோ ரூம் ஜுலை மாத மத்தியில் திறக்கப்பட உள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் ஜுலை இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ஒரே நேரத்தில் புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்டு, இந்தியாவில் டெஸ்லா தனது விற்பனை மற்றும் செயல்பாட்டை தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த விற்பனை தளங்களில் இந்தியாவிற்கான டெஸ்லாவின் முதல் மின்சார காராக, மாடல் Y விற்பனை செய்யப்பட உள்ளதாம். இதற்கான முதல் பேட்ச் மாடல் Y கார்களானது சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட உள்ளது.
டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர்
ரியர் வீல் ட்ரைவ் அம்சம் கொண்ட மாடல் Y காரின் சில யூனிட்களை இறக்குமதி செய்வது மட்டுமின்றி, அமெரிக்கா, சீனா மற்றும் நெதர்லாந்திலிருந்து தனது சூப்பர் சார்ஜர் நெட்வர்க்கிற்கான சில உபகரணங்களையும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்துள்ளதாம். இந்தியாவில் அடுத்த மாதம் செயல்பாட்டை தொடங்கும் நோக்கில், உதிரி பாகங்கள், அக்செசரிஸ் உள்ளிட்ட பொருட்களையும் இந்தியாவிற்குள் டெஸ்லா இறக்குமதி செய்துள்ளது.
மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு:
உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி வரி தொடர்பான மத்திய அரசின் விதிகள் ஒத்துப்போகாததால், இந்திய சந்தையில் நுழைவதில் டெஸ்லா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரியில், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அமெரிக்காவில்பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அதன் பிறகு, மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்து உள்ளூர் உற்பத்தியைத் தொடங்குவதாக உறுதியளித்தால், குறைந்த இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என ஒரு புதிய மின்சார வாகனக் கொள்கையை இந்திய அரசு வகுத்தது. அதன் தொடர்ச்சியாக தான், இந்திய சந்தையில் டெஸ்லா தனது முதல் ஷோரூமை தொடங்க உள்ளது.
டெஸ்லாவின் மாடல் Y கார் விலை:
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, டெஸ்லாவின் மாடல் Y காரின் 5 யூனிட்கள், ஷாங்காயிலிருந்து மும்பைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே அதிகம் விற்பனையாகும் இந்த மின்சார காரின் மதிப்பு சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயில் 27 லட்சத்து 75 ஆயிரம் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த காருக்கான இறக்குமதி வரி மட்டுமே ரூ.21 லட்சம் வரை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, உள்ளூர் சந்தையில் டெஸ்லாவின் மாடல் Y காரின் விலை ரூ.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். அதேநேரம், அதிகாரப்பூர்வ விலையானது ஷோ ரூம் திறப்பின்போது நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்படும். ஆனால், குறைந்தபட்சம் காரின் விலை ரூ.50 லட்சத்தை எட்டும். அமெரிக்காவில் இந்த கார் ரூ.39 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டாலும், அரசின் மானியங்கள் மற்றும் வரிச்சலுகைகள் காரணமாக பயனாளர்கள் ரூ.32 லட்சம் மட்டுமே செலுத்துகின்றனர்.
டெஸ்லாவின் மாடல் Y கார் எப்படி?
டெஸ்லாவின் காம்பேக்ட் மின்சார எஸ்யுவி ஆன மாடல் Y கார், கடந்த 2020ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை மற்றும் பெரிய மாடல் எக்ஸ்-க்கு மாற்றாக இந்த காரை டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் உள்ள பேட்டரி பேக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், சராசரியாக 540 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு பரிசோதனையில், ADAS தொழில்நுட்பத்துடன் 5 ஸ்டார் குறியீடுகளை பெற்றுள்ளது. அட்டகாசமான வடிவமைப்பு, அபாரமான செயல்திறன் மற்றும் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களின் கலவையில் பணத்திற்கு நிகரான மதிப்பை கொண்டதாக மாடல் Y கார் திகழ்கிறது. அதோடு, இது பிரீமியம் காரா அல்லது சொகுசு காரா? என்ற விவாதத்தையும் நீட்டித்து வருகிறது.
இந்தியாவில் மின்சார கார்கள்:
இந்தியாவைப் பொறுத்தவரை, மின்சார கார் பிரிவு இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனையில் 5 சதவிகிதம் மட்டுமே உள்ளது. மொத்த புதிய கார் விற்பனையில் பிரீமியம் மாடல்கள் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே ஆகும். அதனால், மாடல் Y-க்கு நியாயமான விலை நிர்ணயம் செய்து, வாங்குபவர்களுக்கு பணத்திற்கு மதிப்புள்ள காராக தோன்றச் செய்வது டெஸ்லாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI