தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை தொடர்பாக உறுப்பினர்களின் கேள்வி, பதில் நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனைத்தொடர்ந்து, அவர் பேசுகையில், ஆன்லைன் சூதாட்டம் குறித்து எந்த சட்டமும் தமிழ்நாட்டில் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்றும், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் சில இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சென்னை மெட்ரோ ரயில் ஊழியர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை குறிப்பிட்டும் பேசினார். மேலும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும், அரசு வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, மகளிர் இலவச பேருந்து தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். மாநகர பேருந்துகளில் வெள்ளை போர்டு பேருந்துகள் மட்டுமல்லாமல் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் ஏற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மகளிர் பேருந்து என்பது முதலமைச்சரின் கனவுத்திட்டம்என்றும், அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க முடியாது என்றும், போக்குவரத்துத்துறை ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் கூறினார். எல்லா பேருந்துகளிலும் இலவசமாக அனுமதிக்கப்பட்டால் எப்படி போக்குவரத்துறையை நடத்துவது? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
”மக்கள் சந்தோஷமாதான் இருக்காங்க. நம்முடைய ராஜுதான் சந்தோஷமா இல்லைனு நினைக்கேன்” என்று சபாநாயகர் கூறியதை அடுத்து, பேச்சைத்தொடங்கிய செல்லூர் ராஜுவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது பதிலால் அவரை அமர செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்