சென்னை-குரோம்பேட்டையில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் திருக்கோயில் வசம் கொண்டு வரப்பட்டதாக தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.      


இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், "சென்னை-குரோம்பேட்டை அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2.02 ஏக்கர் நிலத்தினை சில தனிநபர்கள் புல எண்களை மாற்றி விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும், அந்த நபர்கள் மேற்படி நிலத்தினை ஆக்கிரமித்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோயில் வசம் இன்று (28.06.21) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு 15 கோடி" என்று தெரிவித்தார். 



தமிழ்நாட்டில் மு.க ஸ்டாலின் தலையிலான திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு,  ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்பது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில் நிலங்கள், கட்டடங்களின் விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில், புவிசார் குறியீடு செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் உரிமை ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும்,கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள், விழாக்கள் போன்ற தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.  


முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, " கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி பாக்கி வைத்திருக்கும் விவசாயகளிடம் இருந்து, பாக்கி வசூல் செய்யும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார். மேலும், கோவில் சொத்துக்கள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 3.43 லட்சம் ஏக்கர் நிலம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.        




Women as Priests : இனி பெண்கள் விரும்பினால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு..!


இதற்கிடையே, தமிழ்நாட்டு கோயில்களுக்கு சொந்தமாக இருந்ததாக 1985 – 87-ஆம் ஆண்டில் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்த 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்பவர் தொடுத்த இந்த வழக்கில், "1985-86 மற்றும் 1986-87-ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. மேலும், 2018–19 மற்றும் 2019–20ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது" என்று குறிப்பட்டார்.   


கோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா?