கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தெற்கு மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(வயது 48).முந்திரி வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன்(37). இவர் முந்திரி வியாபாரம் செய்து தொழிலில் நஷ்டம் அடைந்தார். நேற்று இரவு கலைசெல்வன்,வடிவேலை நேரில் சந்தித்தார். அப்போது கலைசெல்வன் தனக்கு கடனாக ரூ.3ஆயிரம் பணம் வேண்டும் எனகூறினார். உடனே வடிவேல் அவருக்கு பணம் கொடுத்தார். அதன் பின்னர் கலைசெல்வன் தனது மோட்டார் சைக்கிள் வேலங்குப்பம் பகுதியில் நிற்பதாகவும். தன்னை அந்த பகுதிக்கு அழைத்து செல்லும்படி கூறினார். இதை நம்பிய வடிவேல் மோட்டார் சைக்கிளில் கலைசெல்வனை அந்த பகுதிக்கு அழைத்து சென்றார். வேலங்குப்பம் பகுதியில் உள்ள முந்திரி தோப்பு அருகில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது கலைசெல்வன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேலுவின் கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி கூறினார்.




அதன் பின்னர் உடனடியாக ரூ.50 லட்சத்தை இந்த பகுதிக்கு எடுத்து வர சொல் என்று வடிவேலுவிடம், கலைசெல்வன் கூறினார். அதற்கு வடிவேல் மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த கலைசெல்வன் கத்தியால் வடிவேலுவின் கையில் வெட்டினார். இதில் பயந்து போன வடிவேல் செல்போன் மூலம் அவரது உறவினர் வினோத்குமாரை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு உடனடியாக வேலங்குப்பம் பகுதிக்கு வருமாறு கூறினார்.




உடனே வினோத்குமார் ரூ.50 லட்சத்தை ஒரு பையில் எடுத்து கொண்டு அந்த பகுதிக்கு சென்றார். அந்த பணத்தை அந்த பகுதியில் உள்ள மினிலாரியில் வைத்து விட்டு சிறிது தூரம் தள்ளி நிற்குமாறு கலைசெல்வன் கூறினார். அதன்படி வினோத்குமார் ரூ.50 லட்சத்தை மினி லாரியில் வைத்து விட்டு சென்றார். அதன் பின்னர் கலைசெல்வன் ரூ.50 லட்சம் பணத்துடன் மினிலாரியில் தப்பி சென்றுவிட்டார். கலைசெல்வன் கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த வடிவேலை அவரது உறவினர் வினோத்குமார் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு வடிவேலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.




இது குறித்து காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாபுபிரசாத் தலைமையில் காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், தவசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முந்திரி வியாபாரி வடிவேலை கத்தியால் வெட்டி ரூ. 50 லட்சம் பணத்தை பறித்து சென்ற கலைசெல்வனை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கலைசெல்வனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.