தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகராகப் பணிபுரிய இனி பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என அந்தத்துறையின் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இதன்படி அர்ச்சகராகப் பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு விரைவில் சிறப்பு பயிற்சி தொடங்கப்படும், அர்ச்சகர்கள் பற்றாக்குறை உள்ள கோயில்களில் பயிற்சிபெற்ற பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.



Women as Priests : இனி பெண்கள் விரும்பினால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும்  - அமைச்சர் சேகர் பாபு..!


மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டப்படி அடுத்த நூறு நாட்களுக்குள் அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் , தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அறிவிப்புப் பலகை வைக்கப்படும் மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோயில்களில் இனி தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களும் இனி அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்கிற அறிவிப்பை அனைவரும் வரவேற்றுள்ளனர். 

கடந்த சில தினங்களாக இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு ஆய்வுப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த அவர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும் என்றும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை 100 நாட்களுக்குள் செயல்படுத்துவோம் என்றும், தமிழில் அர்ச்சனை செய்வது செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.


இதற்கடுத்த கட்டமாக இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, மாவட்டம்தோறும் கோயில்களை கண்காணிக்க குழுக்கள் மற்றும் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read : வண்டலூர் பூங்கா சிங்கத்திற்கு புதிய வகை கொரோனா; மருத்துவ குழுவினர் அதிர்ச்சி!