மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த ரஜினிசெல்வம் மற்றும் அவரது மனைவி சற்குணம் தம்பதி. தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டு  விஷேசத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டில் சரியான பாதுகாப்பு இல்லை என ஒரு கைப்பையில் வைத்து  1.5 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை உடன் எடுத்து சென்றுள்ளனர். குழந்தையையும், கை பையையும் பிடித்திருந்த சற்குணம், சற்று தூரம் சென்றதும்  தன் கையில் இருந்த கைப்பை தவறியதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனையடுத்து கணவரிடம் தெரிவிக்க கணவன், மனைவி இருவரும் அவர்கள் பயணித்த  சாலை முழுவதும் கைப்பையை தேடி அலைந்துள்ளனர். பை கிடைக்காததால் கவலையில், பை காணாமல் போனது குறித்து பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 





புகாரை பெற்றுக்கொண்ட பொறையார் காவல்துறையினர் காணாமல் போன பை குறித்த விசாரணை மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் அவர்கள் தவறவிட்ட கைப்பையை கண்டெடுத்த தரங்கம்பாடி சேர்ந்த இளைஞர் கிருஷ்ணன் என்பவர் பொறையார் காவல்நிலையத்திற்கு சென்று தான் வரும் வழியில் கைப்பை ஒன்று கிடைத்ததாகவும், அதில் பணம் மற்றும் தங்க, வெள்ளி நகைகள் இருப்பதாகவும் கூறி காவலர்களிடம் ஒப்படைத்துள்ளார். கிழே கிடந்த பணம் நகைகளை தன்னுடைய இல்லை என எடுத்து வந்து காவல் நிலையத்தில் கொடுத்த இளைஞர் கண்டு ஆச்சர்யம் அடைந்த பொறையார் காவலர்கள், பையை தவறவிட்ட  தம்பதியினரை அழைத்து. இனிவரும் காலங்களில் இது போன்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என அறிவுரை வழங்கி பையை கண்டெடுத்து கொடுத்த இளைஞர் கிருஷ்ணனை பாராட்டி அவர் கையாலேயே 1.50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகள் அடங்கிய கைப்பையை ஒப்படைக்க வைத்தனர்.  தவறவிட்ட பொருட்களை ஒரு மணி நேரத்தில் கண்டெடுத்து வழங்கிய இளைஞரின் மனிதநேய செயலுக்கு ரஜினிசெல்வம் , சற்குணா தம்பதியினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும் இந்த தகவலை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்களும் இளைஞரின் செயலை மனதார வாழ்த்தி பாராட்டினர்.





கொரோனா வைரஸ் தொற்றின் ஊரடங்கு காரணமாக பலரும் வேலை வாய்ப்புகளை இன்றி வாழ்வாதாரம் இழந்து அன்றாடத் தேவைக்கே செய்வதறியாது பல இன்னல்களை சந்தித்து வரும் இந்த வேளையில் சிலர் பணத்திற்காக தவறான வழிகளில் திருடுதல், வழிப்பறி செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்படிப்பட்ட  இந்த கால கட்டத்தில் சாலையில் கிடந்த பணம் மற்றும் நகைகள் மீது ஆசையின்றி அதனை ஒப்படைத்த இளைஞரின் செயல் பாராட்டக்கூடியதே.