"மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்" என்று போற்றப்படுவர் தான் மதுரை 292- வது ஆதீனம் அருணகிரிநாதர். எம்.ஜி.ஆர், கருணாநிதி, பழ.நெடுமாறன், ஜெயலலிதா உட்பட பல்வேறு அரசியல், திரை பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது. ஆதீனம் அருணகிரிநாதர் தமிழையும், சைவத்தையும் இரு கண்களாக நினைத்து செயல்பட்டவர் என போற்றப்படுகிறார். உலக முன்னணி நாடுகளுக்கு சென்று ஆங்கில சொற்பொழிவும் ஆற்றியுள்ளார். தமிழ்நாட்டில் முக்கிய நபர்களில் வரிசைப்பட்டியலில் இருக்கும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு கடந்த சில வருடங்களாக உடல் நலம்குறைவாக இருந்தது.
77 வயதுடைய அருணகிரிநாதர் கடந்த 8-ம் தேதி சுவாசக்கோளாறு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவ மனையில் இரவு 9:33 அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரின் நிலை சவாலாக இருந்ததால் 12-ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று 13-ம் தேதி இரவு சுமார் 9:15 மணிக்கு உயிரிழந்தாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக நள்ளிரவில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீனம் மடத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆதீனத்தின் உடலுக்கு கோவை காமாட்சிபுர ஆதீனம் மற்றும் திருவாடுதுறை ஆதீனம் , இளைய மதுரை ஆதீனம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினா். இதனையடுத்து அவரது மடத்தின் உட்புறத்தில் உடலானது சித்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் ஆதினத்தின் உடல் நான்கு மாசி வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதினத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
நள்ளிரவு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த திருவாடுதுறை ஆதீனம் செய்தியாளர்களிடம்....," மதுரை மாநகரில் முனிச்சாலை அருகே மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் இன்று மதியம் மூன்று மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 10 நாட்களுக்குப் பிறகுதான் 293வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகளுக்கு முடி சூட்டப்படும்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை காமாட்சிபுர ஆதீனம்...," தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதீனங்கள் அனைவரும் நாளை அஞ்சலி செலுத்த உள்ளார்" என்றார்.
செய்தியாளர்கள் நித்யானந்தா குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என இரு ஆதினங்களும் கேட்டுகொண்டனர்.
சர்ச்சைக்கு சற்றும் சோடை போகாத நித்தியானந்தா, ஆதீனம் அருணகிரிநாதர் மருத்துமனையில் இருந்த போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு பூகம்பத்தை கிளம்பினார். 292-வது ஆதீனம் இறப்பிற்கு பின் என்ன செய்யபோகிறாரோ என என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் 293-வது ஆதீனமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு 10 நாட்களில் முடிசூட்டப்படும் என மற்ற ஆதீனங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் 292-வது மதுரை ஆதினம் குறித்த செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai Adheenam: ‛செய்தியாளர்... ஆன்மிகவாதி.. அரசியல்வாதி... தமிழ் ஆர்வலர்’ அருணகிரிநாதர் கடந்து வந்த பாதை!
மதுரையின் 292-வது ஆதீனம் அருணகிரிநாதர் இறப்பிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.பி.தொல்.திருமாவளவன், சு.வெங்கடேஷன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !