கார் விபத்து ஒன்றில் தன் தம்பியையும், தன் கண் பார்வையையும் இழந்த சிபிஐ அதிகாரி நயன்தாரா. அதனால் அவரது வேலையும் பறிபோய் விட, பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக, தம்பியைக் கொன்றுவிட்டதாக குற்றவுணர்வுடன் வாழ்ந்து வருகிறார். இன்னொரு பக்கம், பெண்களைக் காரில் கடத்தி, வன்கொடுமை செய்யும் கொடூர சைக்கோவாக அஜ்மல். காவல்துறை எஸ்.ஐ ஆகப் பணியாற்றும் மணிகண்டனுக்குத் தனது காவல் நிலையத்தில் தன்னை அனைவரும் மதிக்க வேண்டும் என்பது ஆசை. 


இந்த மூவரும் ஒரு புள்ளியில் இணைய, நயன்தாரா தன் பார்வையை மீண்டும் பெற்றாரா, அவரது குற்றவுணர்வில் இருந்து மீண்டாரா, அஜ்மலால் கடத்தப்பட்ட பெண்களுக்கு என்ன ஆனது, மணிகண்டன் தனது ஆசையை நிறைவேற்றினாரா என்ற மீதிக்கதையைப் பேசியிருக்கிறது ‘நெற்றிக்கண்’.


‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் நயன்தாராவின் பெயர் காட்டப்படுகிறது. அதற்கேற்றபடி, முழு படத்திலும் நயன், நயன், நயன் மட்டுமே! கண் பார்வையிழந்த பெண்ணாக, தம்பியை இழந்த குற்றவுணர்வுடன் தவிப்பது, தனது நாயை இழந்து அழுவது, தன் முன் நிற்கும் எதிரியைக் காண முடியாமல் அச்சத்தில் தவிப்பது எனப் பல காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார் நயன். படத்தைத் தாங்கிப் பிடிப்பதும், அதன் முக்கிய ப்ளஸாக இருப்பதும் அவரே. 



நீண்ட நாட்களுக்குப் பிறகு, தனது ஆற்றலை நிரூபிக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, வில்லனாக அசத்தியிருக்கிறார் அஜ்மல். சமகாலத் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களுள் ஒருவரான மணிகண்டன், இதில் காக்கிச்சட்டை அணிந்திருக்கிறார். காவல்துறைக்கே உரிய மிடுக்கு அவரிடம் இல்லையென்ற போதும், அதற்காக முயன்று போராடும் உறுதிகொண்ட கதாபாத்திரம் அவருடையது. ‘வடசென்னை’, ‘சகா’ ஆகிய படங்களில் நடித்த சரண் சக்தி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 


கொரியத் திரைப்படமான Blind என்பதின் ரீமேக் என்ற போதும், கொரியன் திரைப்படத்தின் த்ரில் இந்தப் படத்தில் கைகூடாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றம். தமிழ் சினிமாவுக்கே உரிய சில மாற்றங்களால் படத்தின் நீளம் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு ஓடுகிறது. படத்தின் நீளம் அதன் மைனஸ். ’இதுவும் கடந்து போகும்’ பாடல் மட்டுமே படத்தில் பாராட்டத்தக்கதாக இருக்கிறது. த்ரில்லர் படங்களுக்கே உரிய பின்னணி இசையில்லாததால், காட்சிகளின் வீரியம் குறைந்து காணப்படுகின்றன. 


சென்னை போன்ற மாநகரத்தில் இத்தனை பெண்கள் காணாமல் போன பிறகும் வெறும் ஒரு காவலர் மட்டும் விசாரணை நடத்துவதாக இருப்பது, இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகும் சிசிடிவி கேமராவை ஒரே ஒரு இடத்தில் மட்டும் பயன்படுத்தியது, அஜ்மல் நயன்தாரா மீது கொண்டிருக்கும் மோகத்திற்குக் காரணம் என அவர் காட்டும் புகைப்படம் என்னவானது என்ற பிரச்னை, அவ்வளவு பெரிய வழக்காக அது மாறிய பிறகும், அஜ்மலைக் காக்க வெறும் மூன்று காவலர்கள் மட்டும் இருப்பது எனப் படம் முழுவதும் லாஜிக் ஓட்டைகள். சென்னையின் மிக முக்கிய மால் ஒன்றில் வைத்து, அஜ்மல் செய்யும் பகிரங்கமான கொலையை யாருமே கண்டுகொள்ளவில்லையா என்ற கேள்வியும் மனதில் எழாமல் இல்லை. 



தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் வெளிவந்த திரைப்படங்களான ராட்சசன், பெண் குயின், நவம்பர் ஸ்டோரி முதலான படங்களின் வரிசையில் இதில் வரும் வில்லனும் கிறித்துவராகவே காட்டப்படுகிறார். திரைக்கதை எழுவதில் சோம்பல் என்பது போல, பெண் குயின், நவம்பர் ஸ்டோரி போன்று இந்த வில்லனும் மருத்துவராகவே வருகிறார். மருத்துவர் என்பதால் அவருக்கு எந்த நரம்பில் என்ன ஊசி போட்டால் மயக்கமடையச் செய்யத் தெரியும், எந்த நரம்பை அறுத்தால் மரணம் நிகழும் என்று அவருக்குத் தெரியும் என்ற ரீதியில் இந்தப் படத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது வில்லன் கதாபாத்திரம். மூலக்கதையிலும் வில்லன் டாக்டர் என்ற போதும், அரைத்த மாவையே அரைக்காமல் மாற்றியிருக்கலாம்.


ஒரு கொடூரமான குற்றம் நிகழும் போது, அதனை ஒருபக்கம் மறக்கடிக்கச் செய்து, முன்னணி நாயகர்களின் கதைகள் மேல் எழும்பச் செய்யும் பாணியில் தமிழில் த்ரில்லர் திரைப்படங்கள் எழுதப்படுகின்றன. ‘திட்டம் இரண்டு’ படத்தில் தனியாக இருக்கும் பெண் கொலை செய்யப்பட்டும் கதை ஐஷ்வர்யா ராஜேஷின் விசாரணையை மட்டுமே கதை மையப்படுத்தும். பார்வையாளர்களுக்கு ஷாக் அளிப்பதற்காக அந்தக் காட்சி வைக்கப்பட்டிருக்கும். அதைப் போலவே, இதிலும் கடத்தப்பட்ட பெண்களைக் காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல், கடத்தப்படாமல் இருக்கும் நயன்தாராவைக் காப்பது என்ற ரீதியில் கதை அமைந்து, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பெரும் குற்றங்கள் பின்னுக்குத் தள்ளப்படும் ரீதியில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.


நயன்தாரா ஏற்கனவே நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வரும் தம்பிப் பாசம், சிபிஐ அதிகாரி வேடம், சைக்கோ குற்றவாளி என மீண்டும் பார்த்தவற்றையே பார்த்த உணர்வும் இதில் தோன்றாமல் இல்லை. 


’நெற்றிக்கண்’ நயன்தாரா ரசிகர்களைத் திருப்திபடுத்தலாம்; மற்றபடி த்ரில்லர் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்! 


’நெற்றிக்கண்’ Disney+ Hotstar தளத்தில் வெளியாகியிருக்கிறது.