மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சன்னிதானம் என அழைக்கப்படும் அருணகிரி நாதர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வெளியில் வராமல் ஆதீன மடத்திலேயே முடங்கி இருந்தார். கொரோனா பேரிடர் காலங்களில் பிறரிடம் பேசுவதை கூட அவர் தவிர்த்தார். அவரது அறிவிப்புகள் கூட அவரது உதவியாளர்கள் மூலமே வெளியாகி வந்தது. தொடர்ந்த சுவாசப்பிரச்னையால் அவதியடைந்து வந்த அவருக்கு திடீரென தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப்பிரச்னை காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அருணகிரிநாதர் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக மருத்துவர்களின் சிகிச்சை பெரிய அளவில் பயனளிக்கவில்லை. செயற்கை சுவாசக்கருவியுடன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அருணகிரி நாதர், அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. தமிழ்நாட்டின் முக்கிய ஆதினமான மதுரை ஆதினத்தின் உடல்நலக்குறைவு, மற்ற ஆதின மடாதிபதிகளுக்கு கவலையளித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று பல்வேற ஆதின மடாதிபதிகள் மதுரை வருகை தந்தனர். சிலர் அருணகிரிநாதரை மருத்துவமனையில் நேரில் சந்தித்தனர். தருமபுர ஆதினம் தலைமையிலான மடாதிபதிகள், மதுரை ஆதின அறையை பூட்டி சீல் வைத்தனர். அது வழக்கமான நடவடிக்கை தான் என்றும், மதுரை ஆதின இளவரசர் உள்ளிட்டோர் முன்னிலை தான் முறையாக சீல் வைக்கப்பட்டதாக தருமபுர ஆதினம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மடாதிபதிகளின் வருகையின் போதே ஒருவேளை மதுரை ஆதினம் குரு முகூர்த்தமானால்(இறப்பு) அவருக்கான இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து முடிந்தது. அதன் படி மதுரை ஆதினம் அருகே உள்ள இடத்தில் பொக்லைன் இயந்திரங்கள் செல்வதற்கு வழியில்லை என்பதால், மதுரை முனிச்சாலை பழைய தினமணி டாக்கீஸ் அருகே இடம் தேர்வு செய்து, அதற்கான பணிகளும் துவங்கியுள்ளன.
கடந்த மார்கழி மாதம் அருணகிரி நாதரை தருமபுர ஆதினம் சந்தித்த போது, தனது குரு முகூர்த்தம் குறித்து அவர் அவரிடம் பேசியதாகவும், அதன் அடிப்படையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக ஏற்கனவே தர்மபுர ஆதினம் தெரிவித்த நிலையில், அபாய கட்டத்தை அருணகிரி நாதர் எட்டியதால் எந்த பிரச்னைகளும், சொந்தரவும் இல்லாத வகையில் அவரது குரு முகூர்த்தத்தை நடத்த மடாதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.
மதுரை ஆதின அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது ஏன்? தருமபுர ஆதின மடாதிபதி விளக்கம்!
ஆதினம் அருணகிரிநாதர் அறைக்கு பூட்டு; எழுந்தது அடுத்த ஆதினம் யார் என்கிற பிரச்னை!