புகழ்பெற்ற மதுரை ஆதினத்தின் 292 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதி யார் என்ற சர்ச்சை எழ தொடங்கி பரவலாக பேசப்பட்டு வருகிறது. நித்யானந்தா தான் தான் அடுத்த மதுரை ஆதினம் என கூறிவரும் நிலையில், மதுரை ஆதீனத்தின் 292 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமியை நேற்று தருமபுர ஆதின மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் சந்தித்து அவரது உடல் நிலை குறித்து விசாரித்தார்.




பின்னர் மதுரை ஆதினத்திற்கு நேரில் சென்று மதுரை ஆதினத்தின் முக்கிய அறைகளை ஆதின வழக்கப்படி பூட்டி சீல் வைத்தார். மதுரை ஆதீனம் சித்தி அடைந்தால், அவருக்காக எழுப்பப்படும் குரு முகூர்த்த இடம் குறித்து, நேரில் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில், இது சம்பந்தமாக இன்று தருமபுர ஆதினத்தில் 27வது ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.




அப்போது அவர் கூறும்போது மதுரை ஆதினம் உடல்நலத்துடன் இருந்த போது கடந்த மார்கழி மாதம் தான் சந்திததாகவும், அப்போது மதுரை ஆதினத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தனது குரு முகூர்த்தம் குறித்தும் தனது விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். நேற்று மதுரையில் அவரை சந்தித்த பொழுது என்னைப் பார்த்து கண்ணீர் விட்டதுடன், எனது கையால் தண்ணீர் அருந்தினார். ஏற்கனவே கூறிய ஆலோசனையின்படி தற்போதைய மதுரை ஆதின இளவரசு மற்றும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆதினத்தின் அறைகளுக்கு சீல் வைத்ததாகவும், இது அனைத்து ஆதினங்களின் நடைமுறையில் உள்ள வழக்கம் தான் என்றும்,




மதுரை ஆதீனம் அவர்கள் தருமபுர ஆதீனத்தில், ஐந்து ஆண்டுகள் தம்பிரானாக இருந்துள்ளதாகவும், தானும் ஐந்து ஆண்டுகள் மதுரை ஆதீனம் அவர்களிடம், பணிவிடையாக இருந்ததாகவும், தற்போதைய மதுரை ஆதீன இளவரசராக இருப்பவர் தருமபுர ஆதீனத்தில் கட்டளை தம்பிரான் ஆக இருந்தவர் தான், நாங்கள் மதுரை ஆதீனத்தை எந்தவித நோக்கத்துடனும் பூட்டி சீல் வைக்க வில்லை என்றும், மதுரை ஆதீனம் 292 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள்  நோயிலிருந்து மீண்டு விரைவாக வர வேண்டும் என்பதே எங்களது எண்ணம் என்று தெரிவித்தார்.




மதுரை ஆதீனத்தின் 292 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதி தான் தான் என கூறுவதும், தர்மபுரம் ஆதீனம் 27வது ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மதுரை ஆதினத்தின் அறையை பூட்டி சீல் வைத்ததும் என பெரும் சர்ச்சையும், பரபரப்பும் நிலவி வருகிறது.