மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும் என்றும், 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடங்கியது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அந்த உரையில், “புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக ரூ.703 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும். கோவையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது குறித்து ஒன்றிய அரசிடம் கலந்து ஆலோசித்து விரைவாக முடிவு செய்யப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தின் கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி புறவழி தளத்திற்கான சேவைகள் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்படும். சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும். சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் 2026இல் முடிக்கப்படும்” என்று கூறினார்.
பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பு, பேச வாய்ப்பு கேட்ட அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.
கொரோனா பெருந்தொற்று பேரிடருக்கு நடுவே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் கொரோனா முதல் அலை பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதனால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி பாதிப்புகள், வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என பல்வேறு சிக்கல்களுக்கு இந்த பட்ஜெட் மூலம் தீர்வு கிடைக்குமா என மக்கள் புருவம் உயர்த்திக் காத்திருக்கின்றனர்.
நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21-ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.