உணவிலும், மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவ மூலிகையே ”எள்”. எள் எங்கும் பயிராகக்கூடிய செடியாகும், 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடிய எள் செடி, ஜாவா போன்ற கடல் சார்ந்த தீவுகளில் உள்ள காடுகளில் இயற்கையாகவே விளையும் தாவரமாகும். இதற்குத் ‘திலம்’ என்ற பெயரும் உண்டு. இதில் இருந்து தான் எண்ணெய்க்கு ‘தைலம்’ என்று பெயர் வந்தது. எள் லேசான கசப்பு துவர்ப்புடன் சுவை கொண்டது, ஜீரணமாகும்போது இனிப்பாக மாறும் தன்மை கொண்டது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது.
இப்படிப்பட்ட மருத்துவ குணம்கொண்ட எள் தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் 40% நிலங்கள் மானாவாரி விவசாயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மானாவாரி நிலங்களில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் எள், சோளம், கம்பு, கேழ்வரகு, பச்சை பயிர், துவரை, மொச்சை உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இவ்வாண்டு பருவமழையை பயன்படுத்தி மானாவாரி விவசாயத்தில் விவசாயிகள் அதிக அளவில் எள் பயிரை பயிரிட்டு இருந்தனர். இந்த எள் பயிர் குறுகிய நாட்களான 70 நாட்களில் விளைச்சல் அடைந்து அறுவடை தயாராகும் என்பதால் எள் விவசாயத்தில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் மானாவாரியில் பயிரிடப்பட்ட எள் பயிர்கள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு எள் பயிரிட்ட விவசாயிகளுக்கு குவின்டால் 15,000 ரூபாய் வரை விலையேற்றம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.