தஞ்சாவூர்: பெய்யாமலும் கெடுத்தது, இப்போ பெய்தும் கெடுத்து விட்டது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனை குரல் எழுப்பி வருகின்றனர்.


நீண்ட நெடிய பயணம் செய்யும் காவிரி


கர்நாடக மாநிலம் குடகு மலையில் தலைக்காவிரியாக பிறந்து தமிழகத்தின் பூம்புகாரில் வங்கக்கடலில் கலக்கிறது காவிரி. சுமார் 800 கி.மீ பறந்து விரிந்து தான் பாய்ந்து செல்லும் பகுதிகளை பச்சைபசேல் என்று வளம் கொழிக்க செய்தது காவிரி. தமிழகத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு காவிரி முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் வழியே தன் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்கிறது காவிரி.


தஞ்சை மாவட்டத்தின் உயிர்நாடியான காவிரி


தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தின் உயிர்நாடியே காவிரிதான். சங்க இலக்கியங்களே இதற்கு சான்று. இலக்கியமும், புராணமும் புகழ்ந்த காவிரி இன்று தனது இயல்பை இழந்து காணப்படுகிறது. இருகரைகள் நெடுகிலும் தண்ணீர் பாய்ந்த காவிரியில் தற்போது மணல்களை மட்டுமே காணமுடிகிறது. நடந்தாய் வாழி காவிரி இன்று வறண்டு கிடக்கிறது.


ஆயிரம் ஏக்கர் கோடை நெல் சாகுபடி பாதிப்பு


காவிரி நதி நீா் பாய்ந்து வளம் சோ்ப்பதாலும், விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா,தாளடி என முப்போகம் சாகுபடி நடக்கிறது. மேலும் கோடை நெல் சாகுபடியும் நடக்கிறது. 


தஞ்சாவூர் மாவட்டத்தில் 31,700 ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அறுவடை நேரத்தில் கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மழைநீரில் கோடை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு விளைநிலத்தில் சாய்ந்துள்ளது. அதேபோல் தஞ்சை மாவட்டம் கோவிலூர் உட்பட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட கோடை நெல் ஒரு வாரத்திற்கும் மேலாக விளைநிலத்தில் மழை நீரில் சாய்ந்து கிடக்கிறது.


அழுகி முளைக்கும் பயிர்களால் விவசாயிகள் கண்ணீர்


இதனால் பயிர்கள் அழுகி முளைக்க தொடங்கி விட்டது. வயலில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும், நெற்பயிர்கள் ஈரமாக உள்ளதாலும் இதை அறுவடை செய்ய இயலாது என்று விவசாயிகள் கூறுகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த 50 நாட்களாக பெற்ற பிள்ளைகளை வளர்ப்பது போல் பார்த்து, பார்த்து கோடை நெல் சாகுபடியை மேற்கொண்டோம். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தோம். பயிர்கள் நன்கு விளைந்து வந்ததால் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் அறுவடை செய்து பலன் அடையும் நேரத்தில், பயிர்கள் அனைத்தும் மழை நீரில் பாதிக்கப்பட்டு தற்போது வரை மழைநீரிலே கிடக்கிறது. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மழை பெய்து ஒரு வாரம் ஆகியும் மழைநீர் வடியாதால் பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டது. அறுவடை செய்தாலும் பாதிக்கு பாதி நெல்மணிகள் இயந்திரத்தில் அடிபட்டு சேதம் அடைகிறது. இதனால் செய்த செலவிற்கே பணம் வருமா? வராதா என்ற நிலையில் மிகுந்த வேதனையில் உள்ளோம். கோடை மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.