நடிகர் பிரபாஸ் நடித்துள்ள “கல்கி 2898 ஏடி” (Kalki 2898 AD) படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ள நிலையில் அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை காணலாம். 

நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மாலா மூவிஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் “கல்கி ஏடி 2898”. இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, ஷோபனா, பிரம்மானந்தம், பசுபதி, அன்னாபென், மாளவிகா நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயாணன் இசையமைத்துள்ள இப்படத்துக்காக பிரத்யேகமாக புஜ்ஜி என்ற வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்துக்கு கீர்த்தி சுரேஷ் பின்னணி குரல் கொடுத்துள்ளார். 

விஷ்ணுவின் அவதாரமான கல்கியை புனைவு கலந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு ஒரு வழியாக இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ளார். மேலும் கல்கி படத்தை காண பிரபாஸ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இந்த படத்துக்காக 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடி வரும் நடிகர் பிரபாஸூக்கு கல்கி வெற்றிப்படமாக அமைய வேண்டும் என பிரார்த்தனையும் நடந்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் டைட்டில் தொடங்கி இறுதிக்காட்சி வரை பிரமாண்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.