தஞ்சாவூர்: தென்னை ஒரு கற்பக விருட்சம். இதனுடைய அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியதாக உள்ளது. தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெரா ஆகும். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு. நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து பயன் தரக்கூடியது தென்னை மரம். விவசாயி வளர்க்கும் மரங்களில் தென்னை ஒன்று தான் தினமும் விவசாயிக்கு கைமாறு செய்கிறது.
தென்னையை குறிப்பிட்ட இடைவெளியில் நடுவதன் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி மாவு பொருள் தயார் செய்கிறது. சூரிய வெளிச்சம் கிடைக்காத போது பூக்கள் வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியும் தடைபடுகிறது. எனவே சரியான இடைவெளியில் தென்னை நாற்றுகளை நடவு செய்வது அவசியமாகிறது.
தென்னையில் நிலையான விளைச்சலைப் பெற 25×25 அடி இடைவெளியில் நட வேண்டும். வளர்ச்சி அடைந்த தென்னையின் வேர்பகுதி ஒரு கன மீட்டர் சுற்றளவு இருக்க வேண்டும். ஒரு கன மீட்டரில் சுமார் 7500 வேர்கள் உற்பத்தியாகிறது. எனவே 3×3×3 அடி குழிகள் தென்னங்கன்று நடுவதற்கு ஏற்றதாகும். இவ்வாறு நடப்படும் மரங்களில் பாளைகள் 45 மாதங்களில் வெளி வருகின்றன. மேலும் தண்டு பகுதி, அடி முதல் நுனி வரை சீராக காணப்படும். இவ்வாறு நடப்படும் மரங்கள் புயலினால் பாதிப்படையாமல் நன்கு வளரும் தன்மை கொண்டிருக்கும். இவ்வாறு நடவு செய்வதால் எக்டருக்கு 175 மரங்கள் சதுர முறையில் நட முடியும். வாய்க்கால் ஓரத்திலும், வரப்புகளிலும் ஒற்றை வரிசையாக நடவு செய்யும் போது 20 அடி இடைவெளியில் நட வேண்டும். முக்கோண முறையில் 22 அடி இடைவெளியில் குட்டை ரகங்களை எக்டேருக்கு 236 மரங்களும், 25 அடி இடைவெளியில் நடும் போது 205 மரங்களும் நடலாம்.
குழிகளை தோண்டி நடவு செய்யும் முன் காய்ந்த சருகுகளை இட்டு எரிப்பதன் மூலம் பூச்சி, பூஞ்சாணம் நூற்புழுக்களின் தாக்குதலை தவிர்க்கலாம். குழியில் ஒரு அடி ஆழத்திற்கு மண்ணுடன் மக்கிய தொழுஉரத்தையும் கலந்து நிரப்ப வேண்டும். கன்றுகளில் உள்ள வேர்களை நீக்கி குழியில் கன்றின் தேங்காய் பகுதி பதியும்படி நட வேண்டும்.
கன்றுகள் புதிய வேர்கள் பிடிக்கும் வரை ஆடாமல் இருக்க நீண்ட குச்சிகளை ஊன்றி, கன்றை குச்சியில் கட்டி விட வேண்டும். நடப்பட்ட கன்று வெயிலில் வாடி வதங்காமல் இருக்க பனை, தென்னை ஓலைகளைக் கட்டி 3 மாதங்கள் வரை நிழல் கொடுக்க வேண்டும். குழியில் ஈரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னைக்கு மண் பரிசோதனைப்படி உரமிடுதல் மிகவும் சிறந்தது. முதல் ஆண்டில் தென்னையின் தூரிலிருந்து 60 செ.மீ தூரத்திலும் ஒவ்வொரு ஆண்டும் 30 செ.மீ கூடுதல் தூரத்தில் வட்ட பாத்திகளை அமைத்து உரத்தை பரவலாக இட்டு நன்கு கொத்தி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா தென்னந்தோப்பு கழிவுகள், ஆலை சாம்பல், சர்க்கரை ஆலை கழிவு போன்றவைகளை இட்டு மண் வளத்தை கூட்டலாம். 5 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களுக்கு சுட்ட சுண்ணாம்பு-1 கிலோ, மக்னீசியம் சல்பேட் 500 கிராம், சாதா உப்பு 2 கிலோ வீதம் இட்டு கொத்தி விட்டு நீர் பாய்ச்சலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு மரத்திற்கு ஒரு வருடத்தில் 250 காய்களுக்கு குறையாமல் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.