தஞ்சாவூர்: நடப்பு சித்திரை பட்ட பருவத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய வம்பன்-11 ரக உளுந்து விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக மகசூல் பெற தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் விநாயகமூர்த்தி ஆலோசனை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
 
தமிழ்நாடு உளுந்து தேவையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக, வேளாண்மை - உழவர் நலத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பயறுவகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகள் தனிப்பயிராக மட்டும் இல்லாமல், வரப்பு பயிராக உளுந்து சாகுபடி, ஊடுபயிராக உளுந்து சாகுபடி, நெல் தரிசில் உளுந்து சாகுபடி என பல்வேறு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

உளுந்து பயிரில், விளைச்சலை அதிகப்படுத்த வம்பன் ஆராய்ச்சி வம்பன் - 11 ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரக விதைகள் நடப்பு சித்திரை பட்ட பருவத்திற்கு ஏற்றது. விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும். வம்பன் -11 ரக விதைகள் மூலம் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் போது, பயிர்கள் 30 முதல் 40 செ.மீ. உயரம் வரை வளரும்.

மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலை சுருங்கும் வைரஸ் நோய்கள் தாக்காத வகையில், வம்பன் -11 ரக விதைகளுக்கு எதிர்ப்பு சக்தி உள்ளது. மேலும், இந்த ரக விதைகள் அதிக காய்ப் பிடிக்கும் திறன் கொண்டது. ஒரே மாதிரியான முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக 380 கிலோ மகசூல் தரக் கூடியது

இது, ஏற்கனவே உள்ள வம்பன் - 8 ரகத்தைவிட, 12 சதம் கூடுதல் மகசூல் கொடுக்க கூடியது. எனவே, நடப்பு சித்திரை பருவத்தில் விவசாயிகள் இந்த உளுந்து விதைகளை பயன்படுத்தி பயிர்சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் உளுந்து சாகுபடியை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வேளாண்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.