தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டம் 2 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராததால் தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதி மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி வறட்சியில் தகிக்கின்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி மக்களுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை தடுத்து மடைமாற்றி விடுவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது அதனை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்றனர். ஆனால் தமிழகத்தில் வழக்கம் போல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது காட்சிகளும் மாறத் தொடங்கின. இதுவரை இத்திட்டத்தை செயல்படுத்த எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் இரு மாவட்ட விவசாயிகளும் குடிநீருக்காக ஏங்கும் பொது மக்களும்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும்போது, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பார் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது மழைக்காலங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் வைப்பாற்றில் முதல் முறையாக அயன்ராசாபட்டி, கீழ்நாட்டு குறிச்சி ஆகிய இடங்களில் தனியார் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் மணல் குவாரியை அரசு ஏற்று நடத்த கொள்கை முடிவு எடுத்தது.
அதனைத் தொடர்ந்து அயன்ராசாபட்டி, நென்மேனி, கீழ்நாட்டுகுறிச்சி, முத்தலாபுரம் நம்பிபுரம், அம்மன் கோவில்பட்டி, விருசம்பட்டி ஆகிய இடங்களில் குவாரி அமைக்கப்பட்டு சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்திருந்த மணல் முழுவதும் விதிமுறைகளை மீறி 20 அடி ஆழம் வரை மண்ணை அள்ளியதால் வைப்பாறு மலடாகி போனது. தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு துவங்கும் இடமான அயன்ராசாபட்டி முதல் வைப்பாறு வரை ஆற்றின் இருகரை ஓரங்களிலும் உள்ள கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் கூட்டுக் குடிநீர் திட்ட ஆழ்துளை கிணறுகள் குடிநீர் கிணறுகள் விவசாய கிணறுகள் என இருந்தன. கடும் கோடையிலும் தண்ணீர் வற்றாத இந்த கிணறுகள் அனைத்தும் மணலை மொத்தமாக அல்ல வறண்டு போயின, இதன் காரணமாக சாகுபடியும் முழுமையாக பாதிக்கப்பட்டது.
குடிநீர் கிணறுகள் வறண்டு போனதால் தாமிரபரணி ஆட்சியில் உள்ள தண்ணீரை நம்பி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதியில் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் பகுதிகள் உள்ளது. செழிப்பாக சாகுபடி நடைபெற்ற விவசாய தோட்டங்கள் இன்று வறண்டு வேலிக்கருவை காடுகளாக காட்சியளிக்கின்றன. இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி முத்தலாபுரத்தில் வைப்பாருக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்கு சுமார் 245 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடும் செய்யப்பட்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் இப்பகுதி விவசாயிகள் கிராம மக்கள் என அனைவரும் தங்களுடைய பகுதிகளுக்கு இனி விமோசனம் ஒன்று என எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் அச்சு மாற்றம் ஏற்பட்ட பின்னர் தாமிரபரணி வைப்பார் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் இவர் இத்திட்டத்தை செயல்படுத்தினால் வைப்பாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அனைத்து கிராமங்களுக்கு மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கும் குடிநீரை வழங்க முடியும்.அதே நேரத்தில் விவசாயமும் செழிப்படையும் எனவே போதிய நிதியை இத்திட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து விரைவில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
தமிழக அரசு விரைவாக ஆய்வினை நிறைவு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதை இப்பகுதி மக்களின் எண்ணமாக உள்ளது.