தஞ்சாவூரில் ஆர்வமுள்ள விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பாரம்பரியமான நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:



தஞ்சை தரணி என்றாலே பசுமை போர்த்திய நெல் வயல்கள்தான் நம் மனதில் நிழலாடும். அந்தளவிற்கு தஞ்சை மாவட்டத்தில் பிரதான பயிராக நெல் சாகுபடி தான் உள்ளது. நம் நெல் சாகுபடியில் பாரம்பரிய நெல்வகைகள் எப்போதும் அனைவரிடத்திலும் மிகவும் புகழ்பெற்றது. தற்போதைய காலக்கட்டத்தில் நெல் சாகுபடியில் குறிப்பிட்ட நெல் ரகங்களை தவிர பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.





தஞ்சாவூர் வட்டாரத்தில் தஞ்சாவூர் (விரிவு), வல்லம், மானாங்கோரை மற்றும் சூரக்கோட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ரகங்கள் 50 சதவீத மானிய விலையில் கிலோ 12.50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட தேவைப்படும் ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையின் பேரில் வேளாண் விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய பரவலாக்கம் செய்யப்படும்.


மாப்பிள்ளை சம்பா அரிசியில் வைட்டமின் பி, பி1, புரதச்சத்து, நார்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம் மாங்கனீஸ், பாஸ்பரஸ், அதிகளவில் உள்ளது. இது உடலில் உள்ள சிவப்பணுக்கள் உற்பத்தி செய்து அதிக ரத்த அளவை அதிகரிக்க செய்யும். மாப்பிள்ளை சம்பா ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம். மேலும் சுமார் 155 நாள் முதல் 160 நாள் வயதுடையது.

கருப்பு கவுனி அரிசியில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். இதில் உள்ள நார்ச்சத்தானது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. கருப்பு கவுனி ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம் மேலும் சுமார் 155 நாள் நாள் வயதுடையது.கருடன் சம்பா அரிசி இயற்கை பேரழிவுகளான வெள்ளம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இந்த அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் ஆற்றல் உள்ளது. கருடன் சம்பா ரகம் நீண்ட கால பயிரிடும் சம்பா பருவ ரகம் மேலும் சுமார் 160 முதல் 165 நாள் நாள் வயதுடையது.

எனவே விருப்பமுள்ள விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.