கரூர் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக 60 கன அடி நீரினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ திறந்து வைத்து, மலர் தூவி வரவேற்றனர். படிப்படியாக 90 கனஅடியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தனர். கரூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம். நொய்யல் ஆற்றிலிருந்து வரும் உபரி நீர், கீழ்பவானி ஆற்றிலிருந்து வரும் கசிவு நீர் மற்றும் இப்பகுதியில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.




க.பரமத்தி ஒன்றியம், கரூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அண்மையில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், கீழ்பவானி கசிவு நீர், நொய்யல் ஆற்று உபரி நீரால் கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த நீர் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது.





இந்த நிலையில் வறட்சிப் பகுதியான க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், பாசனத்திற்காக அணையில் இருந்து உபரி நீரினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




அணையின் மொத்த உயரமானது 26.90 அடி ஆகும். தற்போது 26.46 அடி உயரம் தேங்கியுள்ள நீரில் 60 கன அடி உபரி நீர் பாசனத்திற்காக தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. படிப்படியாக உபரி நீர் 90 கன அடியாக உயர்த்தப்படும். இன்று திறந்து விடப்பட்டுள்ள நீரால் 19,480 ஏக்கர் பாசன வசதி பெரும் என்றும், தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் உப்புத்தன்மையானது 400 டிடிஎஸ் அளவு இருப்பதாகவும், இது விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.