தஞ்சாவூர்: மண்வளம் அதிகரிக்கவும், விவசாய நிலங்களில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவியாக செயல்படும் தேக்கு மரங்களை வாய்ப்புள்ள இடங்களில் விவசாயிகள் பயிர் செய்ய முன்வர வேண்டும் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 



மனிதன் வெளிவிடும் கரியமில வாயுவை மரங்கள் உட்கொண்டு மனித குலம் வாழ தேவையான பிராண வாயுவினை வெளியிடுகிறது. இதன் மூலம் காற்றை சுத்தப்படுத்தும் கருவியாக மரம் செயல்படுகிறது. விவசாய நிலங்களில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவியாகும் மரங்கள் செயல்படுகின்றன.
 
கூடுதலாக மண்வளம் காக்கவும், காற்றில் ஈரப்பதத்தை காக்கவும், ஆரோக்கியமான தட்பவெட்ப நிலையை நிலை நிறுத்தவும் மரங்கள் பயன்படுகிறது. மரம் வளர்ப்பவர்களுக்கு கரம் வளர்க்கும் கடின மரம் தேக்கு என்றால் மிகையாகாது.

தேக்கு மரம் தரைமட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. வருடத்திற்கு ஆயிரம் முதல் 5000 மில்லி மீட்டர் வரை மழை பொழியக்கூடிய இடங்களில் வேகமாக வளரும். ஆழமான மண் வகை கொண்ட செழிப்பான மண்படுகைகளில் மளமளவென வளரும். 





ஜனவரி முதல் ஏப்ரல் வரை பூப்பூத்து மே முதல் ஜூலை வரை விதைகளை தரக்கூடியது. மேட்டுப்பாத்தியில் விதைத்து ஒருநாள் ஈரமாகவும், மறுநாள் காய்ந்தும் 14 நாட்கள் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். விதைகள் மூன்றாவது வாரத்தில் முளைக்கத் துவங்கும். 12 மாத மரக்கன்றை எடுத்து நடவு செய்யலாம்.

நாற்றங்காலிலுள்ள தேக்கு மர நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி புழுக்கள், பைப்புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள் ஆகியவை தேக்கு தளிர்களையும் இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான பஞ்சகாவ்யா அல்லது வேம்புபால் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். தண்டுப்பகுதி 2.5 சென்டிமீட்டர் நீளம் வைத்து வெட்டி விட வேண்டும். கிழங்கு மற்றும் வேர்ப்பகுதி 22.5 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலம், ஒரு அடி நீளம் குழி எடுத்து இரண்டு மீட்டருக்கு இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். ஒரு குழிக்கு இரண்டு கிலோ தொழு உரம் மற்றும் 100 கிராம் டிஏபி கலங்து இட வேண்டும். நடவு செய்ய செப்டம்பர், அக்டோபர் மாதம் சிறந்தது.

தேக்கிற்கு ஏழு முதல் பத்து நாட்கள் இடைவெளியில் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். விரைவான வளர்ச்சிக்கு சொட்டுநீர் பாசனம் சிறந்தது. மூன்று மாதத்தில் களை எடுக்க வேண்டும். ஆறு மாசத்துக்கு ஒரு முறை கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். சாதாரணமாக ஒரு ஆண்டில் வேகமாக வளரும். நல்ல பாசனம் உள்ள இடங்களில் 20 ஆண்டுகள் வரையிலும், வயல் வரப்புகளில் 15 ஆண்டுகள் வரை வளர்க்கலாம். அபரிமிதமான ஆதாயத்தை பெற வீடுகள், வயல்கள், வீதிகள் தோறும் தேக்கு மரத்தை நடலாம்.