ஆத்தூர் வெற்றிலைக்கான புவிசார் குறியீடு சான்றிதழை விவசாயிகளிடம் கனிமொழி எம்பி வழங்கினார். மேலும், விளாத்திகுளம் குண்டு வத்தல், தூத்துக்குடி மக்ரூன், உடன்குடி கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் பயிரிடப்படும் வெற்றிலைக்கு அண்மையில் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார்.




தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆத்தூர் வெற்றிலைக்கான புவிசார் குறியீடு சான்றிதழை ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாய சங்கத்தினரிடம் வழங்கி பேசியதாவது: புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் ஆத்தூர் வெற்றிலையை சந்தைப்படுத்தும் வாய்ப்பை உறுதிபடுத்தியுள்ளது. ஆத்தூர் வெற்றிலை மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகும். மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த மருத்துவ ரீதியில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஆத்தூர் வெற்றிலையை தொடர்ந்து விளாத்திகுளம் குண்டு வத்தல், தூத்துக்குடி மக்ரூன், உடன்குடி கருப்பட்டி, முதலூர் மஸ்கோத் அல்வா போன்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தனித்துவம் வாய்ந்த பல கைவிணை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவைகளையும் அடையாளம் கண்டு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரபு, தமிழக அரசின் புவிசார் குறியீடு பதிவு ஒருங்கிணைப்பு அலுவலர் ப.சஞ்சய் காந்தி, ஆத்தூர் ஊராட்சித் தலைவர் ஏ.பி.சதீஷ் மற்றும் திரளான வெற்றிலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.




எல்லாம் சரி அப்படி என்னதான் விசேசம் ஆத்தூர் வெற்றிலையில், பாட்டிமார் கை வைத்தியத்தில் வெற்றிலை முக்கிய பங்காக இருந்தது. குழந்தைகளில் சளி தொல்லைக்கு வெற்றிலை முக்கிய பங்கு பெறுகிறது. நீர்சத்து நிறைந்த வெற்றிலை, குழந்தை மார்பு சளிக்கு வெற்றிலையை விளக்கில் சூடுப்படுத்தி மார்பிலும் முதுகிலும் ஒத்தடம் கொடுக்க சளி தொல்லை குறையும், நுரையீரல் தொற்றுக்கு வெற்றிலை சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து பருகினால் நோய் குறையும், குழந்தையின்மைக்கு வெற்றிலை கொடியின் வேர் பகுதி பயன்படுகிறது. சர்க்கரை நோய்க்கு இரண்டு வெற்றிலையுடன் ஒரு கைப்பிடி வேப்பிலை, கைப்பிடி அருகம்புல் மண்சட்டியில் 500 மிலி தண்ணீரில் போட்டு 150 மிலி ஆகும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன் வடிகட்டி ஒரு வேளைக்கு 50 மில்லி அருந்திவர நோய் தீரும். நீர் பெருக்கத்திற்கு வெற்றிலை சாருடன் பால் கலந்து அருந்தி வர சிறுநீர் நன்றாக பிரியும், தாய்ப்பால் சுரக்க வெற்றிலை முக்கியமாக இருக்கின்றது.