வந்துட்டோம்... தஞ்சையில் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டுக்கிடை போடும் பணிகள் மும்முரம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்துவதற்காக வயல்களில் ஆட்டுகிடைகள்அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை வளத்துடன் மேம்படுத்துவதற்காக ஆட்டுகிடை போடுவது வழக்கம்.

தஞ்சாவூர்: தஞ்சையில் அறுவடை செய்த வயல்களில் ஆடுகளை கிடை போடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்டுக்கிடை போடுபவர்கள் தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்துவதற்காக வயல்களில் ஆட்டுகிடைகள் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் வயல்களை இயற்கை உர வளத்துடன் மேம்படுத்துவதற்காக ஆட்டு கிடை போடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பொதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தை மாதம் தொடங்கி பங்குனி மாதத்தில் நிறைவடையும். அறுவடை முடிந்த பின்னர் விவசாயிகள் வயல்களை காற்றாடப்போட்டு வைக்கின்றனர்.
Just In




இந்த காலகட்டத்தில் விவசாயிகள் வயல்களில் ஆட்டு கிடைகள் போட்டு மண்வளத்தை மேம்படுத்துகின்றனர். இதற்காக ஆட்டுகிடை போடுவதற்காக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஆடு மேய்ப்பவர்கள் ஆட்டு மந்தைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு காவிரி பாசன பகுதிக்கு அதிகளவில் வருகின்றனர். ஆடுகளை வயல்களில் கிடை போடும் போது அவற்றின் சிறுநீர், புழுக்கைகள் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கிறது. இதன் காரணமாக மண்ணின் நீர்பிடிப்புதிறன், காற்றோட்டம், மண்ணின் அடர்வு, மண்ணின் தன்மை, மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இதன் பலன் சாகுபடியின் போது கண்கூடாக தெரிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறுவை சாகுபடியை முன்னிட்டு தஞ்சை பகுதியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஆட்டுகிடை போடுவதற்காக 100க்கும் மேற்பட்ட ஆட்டுகிடை குழுவினர் முகாமிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆட்டுக்கிடையிலும் நூற்றுக்கணக்கான ஆடுகள் உள்ளன. இவற்றை காலையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு இரவில் வயலில் அடைத்து விடுகின்றனர். இதனால் ஆடுகளின் சாணம் வயலுக்கு நல்ல எருவாக மாறுகிறது. இதனால் அடுத்த முறை சாகுபடி செய்யும் போது அந்த எரு நெல் பயிருக்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதனால் சாகுபடி முடிந்தவுடனேயே வயல்களில் ஆட்டுக்கிடை போட விவசாயிகள் மும்முரம் காட்டுகின்றனர். இது இயற்கை உரமாகவும் அமைகிறது.
இதுகுறித்து பாபநாசம் பகுதியில் ஆட்டுகிடை போட வந்துள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கூறுகையில்:
ஆடு மேய்க்கும் தொழிலை நாங்கள் காலம், காலமாக செய்து வருகிறோம். அறுவடை தொடங்கியவுடன் நாங்கள் ஆடுகளை கிடை போடுவதற்காக தஞ்சை பகுதிக்கு வந்து விடுவோம். ஆடு கிடை போடும் வயல்களிலே தங்கிவிடுவோம். கிடை போடுவதற்கு பெரும்பாலும் செம்மறி ஆடுகளையே பயன்படுத்துவோம். வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படுவதால் ஆட்டுகிடை போட விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும், ஒரு நாள் கிடை போடுவதற்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை கூலியாக பெறுகிறோம். ஆடுகளின் எண்ணிக்கையை பொறுத்து கூலி நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும், தஞ்சை பகுதியில் இருக்கும் சூழல் வேறு ராமநாதபுரம் பகுதியில் இருக்கும் சூழல் வேறு. கிடை போடும் பணி நிறைவடைந்ததும் ராமநாதபுரம் செல்வதற்கு முன் செம்மறி ஆடுகளின் ரோமங்களை வெட்டிவிடுவோம். அப்படி வெட்டினால் தான் ஆடுகளுக்கு நோய் பரவல் எதுவும் இருக்காது. அதுமட்டுமின்றி ஆட்டுகிடை போட்டதற்கான கூலியை சிலர் அவ்வபோது கொடுப்பார்கள், சிலர் சாகுபடி முடிந்த பின்னர் கொடுப்பார்கள். வருடந்தோறும் கிடை போட வருவதால் எங்களுக்கு வாழ்வாதார பெருக்கத்தை மட்டுமின்றி, மனநிறைவையும் ஆட்டுகிடை போடும்தொழில் தருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.