தஞ்சாவூர்: ஒரு பக்கம் தீபாவளி பரபரப்பு என்றால் மறுபக்கம் நல்ல மழை பெய்து சாகுபடி பணிகளில் விவசாயிகள் வெகு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் தாளடி நடவு பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது.
சம்பா, தாளடியில் விவசாயிகள் மும்முரம்
டெல்டா மாவட்டத்தில் முப்போகமும் நெல் சாகுபடிதான் முக்கியமான பயிராக விவசாயிகளுக்கு உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, மழை இல்லாதது போன்ற காரணங்களால் இந்தாண்டு ஏராளமான விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை. மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டு வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து வந்தது. இருப்பினும் தற்போதுதான் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
நாஞ்சிக்கோட்டை பகுதியில் தாளடி நடவுப்பணிகள்
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள ஈச்சங்கோட்டை, தெக்கூர், வடக்கூர், காசவளநாடு புதூர், பஞ்சநதிக்கோட்டை, ஆழி வாய்க்கால், காட்டுகுறிச்சி, நெல்லுப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆழ்குழாய் பம்பு செட்டு வசதி உடையவர்கள் குறுவை சாகுபடி செய்தனர். இதன் அறுவடை முடிந்து விட்டது. இந்த பகுதிகளில் விவசாயிகள் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பாக தாளடி நடவு பணியினை முடித்து விட வேண்டும் என திட்டமிட்டு 135 நாட்கள் வயதுடைய ஆடுதுறை 38, 42, 46, பி.பி.டி. ரக நெல்லை நாற்றங்காலில் விதை விதைத்து நாற்றுகளை உற்பத்தி செய்து இருந்தனர்.
அந்த நாற்றுகளை பறித்து அறுவடை முடித்த வயல்களில் உழவு செய்து நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவு பணியை தீபாவளிக்குள் முடிக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இன்னும் 3 நாட்களே தீபாவளிக்கு உள்ள நிலையில் நடவுப்பணிகளை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். கூலி தொழிலாளர்கள் தீபாவளிக்கு ஆடைகள் எடுப்பதற்கு சென்று விட்டால் நடவு பணிகள் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்படும் என்பதால் விவசாயிகள் தீவிரமாக நடவுப்பணிகளில் இறங்கி உள்ளனர்.
விவசாயத் தொழிலாளர்கள் தட்டுப்பாடு
இதற்கிடையில் நடவு நடுவதற்கு கூலி தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்படுவதால் பல இடங்களில் நடவு செய்வது தாமதப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மழை அதிகமாக பெய்தால் இளம் நெற்பயிர் மழை வேகத்தில் தாக்குப்பிடிக்காது என்பதால் நடவு பணியை சுறுசுறுப்புடன் செய்ய விவசாயிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
தீபாவளி பரபரப்புக்கு மத்தியில் சாகுபடி பணிகள்
அதனால் நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள வயல்களில் நடவுபபணிகள் நடந்து வருகிறது. வழக்கமாக ஞாயிறன்று விவசாயப்பணிகள் நடப்பது குறைவு. ஆனால் நேற்று காலை முதல் இப்பகுதிகளில் விவசாயப்பணிகள் வெகு வேகமாக நடந்தது. பின்னர் விவசாயத் தொழிலாளர்கள் தீபாவளிக்கு ஆடைகள் மற்றும் பல பொருட்கள் வாங்க தஞ்சைக்கு வந்தனர். அன்று வாங்கி சம்பளம் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க பயன் உள்ளதாக இருந்தது என்று விவசாய கூலித் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ஞாயிற்று கிழமைகளில் அதிகம் விவசாயப்பணிகள் மேற்கொள்வது இல்லை. ஆனால் இம்முறை தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் நாற்றுகள் நடும் பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது. அதனால்தான் ஞாயிறு அன்றும் நாற்று நடும் பணிகள் நடந்தது என்று தெரிவித்தனர்.