தஞ்சாவூர்: மழையினால் சத்துக்களை இழந்து இருக்கும் நெற்பயிர்களை மீட்டுக் கொண்டு வர  சிங்சல்பேட், நெல் நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள், சூடோமோனாஸ் போன்ற அனைத்து இடுப்பொருட்களும் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் 50 சத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.


இதுகுறித்து வேளாண்மை துணை இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளதாவது:


தஞ்சாவூர் மாவட்டத்தில் சராசரியாக 3 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பருவ நெற்பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்பு ஆண்டில் தற்போது வரை 2 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா, தாளடி நடவு பணிகள் முடிவடைந்து, மீதமுள்ள பரப்பிலும் மும்முரமாக நடவுப்பணி நடைபெற்று வருகிறது. 


கடைமடை பாசன பகுதிகளிலும் ஏரிகள், கண்மாய்கள் நிரம்பி சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த கடந்த 15ம் தேதி முதல் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தற்போது வரை 800 ஏக்கர் பரப்பளவில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால், அனைத்து வட்டாரங்களிலும் 2500 ஏக்கர் பரப்பில் இளம் நடவு நெற்பயிர் மூழ்கியுள்ளதாக கள ஆய்வில் அறிக்கை பெறப்பட்டுள்ளது.


மழை நின்ற பின்னர் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள பரப்பு ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கையை அனுப்பப்படும். மேலும் மழையினால் சத்துக்களை இழந்து இருக்கும் நெற்பயிர்களை மீட்டுக் கொண்டு வர தேவையான சிங்சல்பேட், நெல் நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள், சூடோமோனாஸ் போன்ற எதிர் உயிர் காரணிகள் ஆகிய அனைத்து இடுப்பொருட்களும் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் 50 சத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.


மேலும் விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடப்பு சம்பா. தாளடி பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்து கொள்ள வரும்ர் 30ம் தேதி வரை அரசால் கால நீட்டிப்பு பெற்று தரப்பட்டுள்ளது.


இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் தவறாமல் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.