தஞ்சாவூர்: பெங்கல் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 1500க்கும் அதிகமான நெல் சாகுபடி வயல்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதில் ஒரத்தநாடு, தலையாமங்கலம், நெய்வாசல் தென்பாதி பகுதிகளில் சம்பா, தாளடி நடவு வயல்கள் அதிகளவில் மூழ்கியுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. நேற்று மாலை நிலவரப்படி, அது நாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென் கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே-தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்தது. பெங்கல் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் ஒரு சில இடங்களில் கனமழையும் மற்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழை அதிகரிக்க தொடங்கியது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை, புத்தூர், அருந்தவபுரம், கம்பர்நத்தம் பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பயிர்கள் சுமார் 500 ஏக்கர் அளவிற்கு நீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் பாபநாசம் தாலுகா பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம் உட்பட பகுதிகளில் தோட்டக்கலைப்பயிரான வெற்றிலை சுமார் 12.5 ஏக்கர் அளவில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Fengal Cyclone LIVE Updates | ஃபெங்கல் புயல் LIVE
ஒரத்தநாடு பகுதியில் தலையாமங்கலம், குலமங்கலம், நெய்வாசல் தென்பாதி உட்பட சுற்றுப்பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இந்த மழை தொடர்ந்தால் பயிர்கள் அழுகி பெரும் சேதம் ஏற்படும் என்று தெரிவித்தனர். எனவே வேளாண்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து முழுமையாக கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதேபோல் தஞ்சை பகுதியில் ஒரு சில தாழ்வான இடங்களில் மழைநீர் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மாப்பேட்டை அருகே புத்தூர் பகுதியில் வயல் ஓரங்களில் உள்ள வாய்க்கால்கள் சரியாக தூர்வாரததால் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாகுபடி வயல்களை சூழ்ந்துள்ளது. வாய்க்கால்களை சரியாக தூர்வாரினால் மழைநீர் வழிந்தோடிவிடும். ஆனால் வாய்கால்கள் மண்மேடிட்டு இருப்பதால் சிறுமழைக்கு கூட வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும் சேதுபாவாசத்திரம் பகுதி மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 800 விசைப்படகுகளும், 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த பெங்கல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.