தஞ்சாவூர்: மண் வளத்தை அதிகரித்தால் மகசூலும் அதிகரிக்கும். இயற்கை தந்த வரம், உயிர் உரம். நெல் வயலுக்கு ஏற்ற அசோலா பயன்படுத்துங்கள் பலனை அடையுங்கள் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
மிகச்சிறிய இலைகள், வேர்களை கொண்டது
அசோலா நீரில் வாழும் ஒரு வகை பெரணித் தாவரம். இது மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. ஆனால் இவற்றிற்கு மற்ற தாவரங்களைப் போல் தண்டுப்பகுதி கிடையாது. இலைப்பகுதி நீர்ப்பரப்பின் மேல் மிதந்தும், வேர்ப்பகுதி நீரில் அமிழ்ந்தும் காணப்படும். இலையின் மேல்பகுதி நல்ல பச்சை நிறமாகவும், கீழ்ப்பகுதி வெளிறிய பச்சை நிறத்துடனும் இருக்கும். அசோலாவின் வேர் பழுப்பு நிறமாக, நெற்பயிரின் வேரைப் போன்று சல்லி வேராக இருக்கும். ஆனால், மிகச்சன்னமாக காணப்படும். இதன் இலைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தாற்போல, மிக நெருக்கமாகவும், கிளைத்தும் காணப்படும்.
அசோலா, நீலப்பச்சைப்பாசியின் ஒருங்கிணைந்த கூட்டு வாழ்க்கை
அசோலா என்று சொல்லும் போது தாவரத்தையும், இலைக்குழியில் தங்கி அதன் வாழும் நீலப்பச்சைப்பாசி எனும் நுண்ணுயிரியையும் சேர்த்துக் குறிக்கும். அசோலாவில் இலையின் மேற்புறத்தின் உட்பகுதியில் அனாபினா அசோலா என்றழைக்கப்படும் நீலப்பச்சைப்பாசி வளர்ந்து, காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து அசோலாவிற்கு கொடுக்கிறது. அசோலா தன்னிடத்தில் உள்ள பச்சையத்தின் மூலம் ஒளிச் சேர்க்கை செய்து அந்த உணவுப் பொருளை நீலப்பச்சைப் பாசிக்கு கொடுக்கிறது. இவ்வாறு அசோலாவும், நீலப்பச்சைப்பாசியும் ஒருங்கிணைந்த கூட்டு வாழ்க்கை வாழ்ந்து கிரகிக்கின்ற தழைச்சத்தை நெற்பயிருக்கு அளித்து பயிரின் வளர்ச்சியினை ஊக்குவிக்குகின்றன.
இந்த அசோலா நீர் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. எனினும், சேற்றுடன் கலந்த நெல் வயலில் நன்கு வளர்கின்றன. அசோலாவில் பல வகைகள் இருந்த போதிலும், சில இரகங்கள் நமது தமிழ்நாட்டு தட்ப வெப்பநிலைக்கு ஏற்றவையாக உள்ளன. பொதுவாக நம் நாட்டில் அசோலா மைக்ரோஃபில்லா என்ற இரகம் அதிக வெப்ப நிலையைத் தாங்கி நன்கு வளர்வதோடு, அதிக அளவு தழைச் சத்தையும் கிரகிக்கக் கூடியதாகவும் உள்ளது.
அசோலா வளர தொடர்ந்து தண்ணீர் இருக்க வேண்டும்
அசோலா பெரும்பாலும் கோடை காலப் பருவத்தை தவிர மற்ற பருவங்களில் நன்கு வளரும். மழைக் காலங்களிலும், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் காலங்களிலும் நன்கு வளரும். தண்ணீர் வற்றி வறண்டுவிட்டால் அசோலா காய்ந்து விடும். எனவே தொடர்ந்து தண்ணீர் நிலத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். மேகமூட்டமான காலங்களிலும், நெற்பயிரின் நிழலிலும் இவை நன்கு வளரும். காரத் தன்மையுள்ள மண்ணில் வளர்ச்சி சற்று பாதிக்கப்படும்.
அசோலாவை நெற்பயிர் நட்ட ஒரு வாரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 100 கிலோ இட வேண்டும். 20 முதல் 25 நாட்களில் 10 டன் வரை அசோலா பெருக்கமடையும். அப்பொழுது தண்ணீரை வடிகட்டி களை எடுக்கும் ஆட்களைக் கொண்டு அசோலாவை வயலில் மிதித்து விடுவதால் அவை மக்கி தழை உரமாக நெற்பயிருக்கு கிடைக்கிறது. முதல் களையெடுப்பின் போது மிதிபடாது மிதந்து நிற்கும் அசோலா மீண்டும் வளர்ந்து வயல் முழுவதும் பரவிவிடும். இதன் போது மண்ணில் மக்கி தழை உரமாகிறது.
அசோலாவை 3 வகைகளில் வளர்க்கலாம்
அசோலாவை மூன்று வகைகளில் வளர்த்து நெற்பயிருக்கு இடலாம். நாற்றங்காலில் வளர்த்தல், நெற்பயிரோடு வளர்த்தல், நடவு வயலில்தழை உரமாக வளர்த்தல், நாற்றங்காலில் வளர்த்தல். அசோலாவை நாற்றங்காலில் உற்பத்தி செய்வதற்கு முதலில் நிலத்தை தயார் செய்ய வேண்டும். இதற்கு நிலத்தை ஒரு சென்ட் அளவு கொண்ட பாத்திகளாக பிரிக்க வேண்டும். இந்த பாத்தியின் அகலம் 2 மீட்டருக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில், அசோலா வளர்ச்சி அடைந்த பிறகு பாத்திகளுக்கு வெளியிலிருந்தபடியே எடுக்க வேண்டும். உள்ளே இறங்கி எடுத்தால் அசோலா மிதிபடும்.
நெற்பயிரோடு வளர்த்தல்: தனியாக நாற்றங்கால் அமைக்க நிலம் இல்லாத நிலையிலும், நாற்றுகள் நடவுக்கு தயாராகி விட்ட நிலையிலும், நடவு வயலில் நாற்று நட்டு விட்ட நிலையிலும் அசோலாவை நாற்றங்காலில் வளர்த்து வயல் வெளியில் இடுவது இயலாது. அத்தகைய நிலையில் நெல் வயலில் நடவு செய்த ஒரு வாரத்திற்கு பிறகு நேரடியாக அசோலாவை ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் இடலாம். 20 முதல் 25 நாட்களில் இது நன்கு வளர்ந்து வயல் முழுவதும் பரவிவிடும். இந்த அசோலாவை முன்பு குறிப்பிட்டது போல் முதல் மற்றும் இரண்டாம் களையெடுப்பின் போது மிதித்து விடவேண்டும்.
அசோலாவை தழை உரமாக இடுதல்: பசுந்தாள் உரங்களை நெல் வயலிலேயே வளர்த்து உழவு செய்து விடுவது போல் அசோலாவை நடவு செய்ய வேண்டிய வயலில் இட்டு வளர்த்து, நடவு செய்வதற்கு ஒரு வாரம் முன்பு அசோலாவை மடக்கி உழுது மக்கச் செய்து பிறகு நாற்று நடுவது சிறந்தது. அசோலாவின் வேர்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் அவை செடியினின்று விடுபட்டு சேற்றுடன் கலந்து மக்கி அதிலிருக்கும் தழைச்சத்து நெற்பயிருக்கு கிடைக்கிறது.