தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொடங்கப்பட்டுள்ள நேரத்தில் உரத்தட்டுப்பாடு அதிகம் இருப்பதாக கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.  இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் சாக்குகளை அணிந்தும், கரும்பு தோகைகளை ஏந்தியும் வந்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜிடம் மனு ஒன்றை அளித்தனர். 




அதில் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொடங்கப்பட்டுள்ள நேரத்தில் உரத்தட்டுப்பாடு அதிகம் இருப்பதாகவும், தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியும், நெல்லுக்கு உரிய விலை வழங்க கோரியும் முறையிட்டனர். இதனால் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், கடந்த ஆண்டு சம்பா, தாளடிக்கு செய்யப்பட்ட பயிர் காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதை வட்டியுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எஸ். முஹம்மது இப்ராஹிம், மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின்னர் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், 
ஈரப்பதம் அதிகமாக உள்ளதாக கூறப்படுவதால் பருத்தி கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே கொள்முதல் நிலையங்களில் பருத்தி உலர் இயந்திரங்களை அமைக்க வேண்டும் என தெரிவித்தார். 


இதேபோல் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 700 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைகிறது எனவும் மதுக்கூர் ஒன்றிய விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.பி. சந்திரன் கூறியுள்ளார். விவசாயிகள் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். வருகிற ஞாயிற்றுக்கிழமையும் கொள்முதல் செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளேன் என கூறினார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண