தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு கரும்பு விவசாயிகள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை விவகாரம் தொடர்பாக, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு கரும்பு விவசாயிகள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். விவசாயிகள் தொடர்ந்து பல கட்டங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கான கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தெரியாமலேயே அவர்கள் பெயரில் பெற்றுள்ள கடன்களை, புதிய ஆலை நிர்வாகத்தின் பெயருக்கு மாற்ற வேண்டும். விவசாயிகளுக்கு கடன் பாக்கி இல்லை என்று சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





இது குறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் மத்திய அரசு, மாநில அரசு விலை நிர்ணயம், லாபப் பங்குத் தொகை, வட்டித் தொகை என, 85 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விவசாயிகளுக்கு நிலுவை தொகை தரவேண்டியுள்ளது. இந்த நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க வேண்டும்.  

மேலும் திருமண்டங்குடி திருஆருரான் கரும்பாலை நூதனமான முறையில் மோசடி செய்து விவசாயிகள் பெயரில் கடன் பெற்றுள்ளது. விவசாயிகள் பெயரில் உள்ள கடன்களை ரத்து செய்து, கரும்பு ஆலை நிர்வாகத்தின் பெயருக்கு மாற்ற வேண்டும்.  

புதிதாக ஆலையை வாங்கியுள்ள கார்ல்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் விவசாயிகளை மோசடியான முறையில் கரும்புத் தொகைக்கு 57 விழுக்காடு மட்டும் பெற்றுக் கொள்வோம் என மிரட்டி கையொப்பம் பெற்று வருகிறது. அதையும் 5 தவணைகளாக ஓராண்டுக்குள் பெற்றுக் கொள்வோம் என கையெழுத்து போடும்படி விவசாயிகளை வலியுறுத்தி வருகிறது.
 
எனவே, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை திருஆருரான் சர்க்கரை ஆலை நிறுவன அதிபர் ராம் தியாகராஜனை கைது செய்து வழக்கு தொடர வேண்டும். புதிதாக ஆலையை நிர்வகித்து வரும் கார்ல்ஸ் நிறுவனம் விவசாயிகளிடம் மிரட்டி கையெழுத்து வாங்கும் போக்கை தவிர்க்க வேண்டும்" என்றனர்.





இதற்கிடையில் திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாயை இந்த ஆலையை தற்போது விலைக்கு வாங்கியுள்ள கால்ஸ் டிஸ்லரீஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தினசரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  தமிழகம் முழுவதும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், புயல் எச்சரிக்கை தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையிலும் காத்திருப்பு தொடர் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை தாமதமாவதால், நாளையிலிருந்து தமிழகம் முழுதும்  மாவட்டம்தோறும் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டங்கள் துவங்க உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.