காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குருவை சம்பா தாலடி என மூன்று போகும் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் பின்னர் தற்பொழுது 3 போகம் சாகுபடி பணிகள் என்பது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு கடந்த 75 ஆண்டுகளுக்கு பின்னராக மேட்டூர் அணையை முன்கூட்டியே ஜூன் மாதத்திற்கு முன்னதாக திறந்து வைத்தார். இதன் காரணமாக நெல் சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாலடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடி பணிகள் தொடங்கிய நேரத்தில் இருந்து தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நெல் சாகுபடி என்பது திருவாரூர் மாவட்டத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் ஏற்கனவே நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனையும் மீறி மழை நீரை வடிய வைத்து தற்பொழுது புறமடித்து சாகுபடி பணிகளை மீண்டும் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய அளவில் நிலவி வருகிறது.




குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாரத்திற்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த 21 நாட்களாக யூரியா தட்டுப்பாடு காரணமாக தனியார் கடைகளில் அதிக விலைக்கு பணம் கொடுத்து யூரியா வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடியிலும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 75 நாட்கள் ஆன சம்பா நெற்பயிர்களுக்கு உரமாக யூரியாலை விவசாயிகள் தெளித்து வருகின்றனர். 




இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் யூரியா தட்டுப்பாடு என்பது தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு யூரியா விற்பனை செய்யப்படுகிறது என்றும் குறிப்பாக 300 ரூபாய் விலை உள்ள யூரியாவை 850 ரூபாய் மதிப்புள்ள இடு பொருட்களை வாங்கினால் தான் தருவோம் என தனியார் உரைக்கடைகள் கூறி வருவதாக தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், சீதக்கமங்களம், திருவீழிமிழலை ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த 21 நாட்களாக யூரியா தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் யூரியா கிடைக்காத காரணத்தினால் இளம் பயிர்களுக்கு உரம் இட முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உட்பட்ட சுமார் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் யூரியா தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மாவட்ட வேளாண் துறை மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் யூரியா தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து மாவட்ட வேளாண் அதிகாரகளிடம் கேட்டபோது ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.இருப்பினும் உரிய நேரத்தில் யூரியா தெளித்தால் தான் நெற்பயிர்கள் வளர்ச்சி என்பது சீராக இருக்கும் என்றும் ஏற்கனவே 21 நாட்கள் யூரியா கிடைக்காத சமயத்தில் இன்னும் ஒரு வாரம் ஆனால் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.