தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் கனமழையால் அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் வல்லத்தில் சில வீடுகள் உள்ளே மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் நெல் அறுவடை முடிந்த பின்னர் கடலை, எள், பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வர். இருப்பினும் குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடிதான் பிரதானமாக உள்ளது. நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அறுவடைப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்பகுதிகளில் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆற்று தண்ணீரை கொண்டு சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறுவை சாகுபடி மேற்கொள்ளாத விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடிக்காக நாற்று விட்டுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் தஞ்சை உட்பட சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று மதியம் முதல் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது வேகமாகவும் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம் உட்பட பகுதிகளில் தற்போது குறுவை அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை முடித்து நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதில் மேற்கண்ட பகுதிகளில் தாமதமாக நாற்று விட்டு சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் தற்போது நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.
கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அவ்வபோது அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை மேலும் நீடித்தால் சாகுபடிக்கு தயாராக உள்ள நெற் பயிர்கள் வயலில் சாய்ந்து விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மழையால் அறுவடை முடிந்து காய வைத்த நெல் நனைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை கூடுதலாக்கி கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், நெல்லை காய வைக்க களம் இல்லை. இதனால் சாலைகளில்தான் காய வைக்கிறோம். நன்கு காய்ந்த பின்னர்தான் நெல்லை மூட்டையாக கட்டி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியும். ஆனால், மழை விட்டு விட்டு பெய்வதால் தொடர்ந்து நெல் நனைவதும் காய்வதுமாக உள்ளது. எனவே கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் குறித்து அதிக நெருக்கடி இல்லாமல் கொள்முதல் செய்ததால்தான் நாங்கள் தீபாவளியை கொண்டாட முடியும். இன்னும் தீபாவளிக்கு இரண்டு மூன்று வாரங்கள்தான் உள்ளது என்றனர்.