ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக அரூரில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தரம் இல்லாத விதை நெல் விற்பனை செய்த, கடை மற்றும் நெற்பயிர்களை வேளாண் அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஒரே கடையில் ஈஸ்வரி 22 ரக விதை நெல் வாங்கி பயிரிட்டுள்ளனர். ஆனால் பயிர் நடவு செய்த 20 முதல் 30 நாட்களில் நெல் பயிரில் கதிர் வைத்துள்ளது. இதனை கண்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து விதை வாங்கிய கடையில் புகார் தெரிவித்தபோது, விதை நிறுவனத்திற்கு புகார் தெரிவித்துள்ளதாகவும், நேரில் ஆய்வு செய்ய வருவார்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளது. இந்த நெல் வாங்கிய விவசாயிகளுக்கு சுமார் 30000 முதல் ஒரு. இலட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலை குறித்து, நமது ஏபிபி நாடு இணைய தளத்தில் செய்தி வெளியானது.
இதனை அறிந்த வேளாண்மை துறையினர் தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனருக்கு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து நேற்று விதை விற்பனை செய்த குறிப்பிட்ட கடையில், துணை இயக்குநர்(விதை ஆய்வு) சங்கர், அரூர் வேளாண் உதவி அலுவலர் சரோஜா, உதவி விதை ஆய்வாளர்கள் சிங்காரவேலன், கண்ணன், கார்த்தி ஆகியோர் திடீரென கடையில் ஆய்வு செய்தனர். அப்பொழுது விதை நெல் விற்பனை செய்து குறித்து விசாரணை செய்தனர். மேலும் விற்பனை செய்தது, இருப்பு விவரம் உள்ளிட்டவை சரியாக இருக்கின்றனவா என ஆவணங்களையும் சரிபார்த்தனர். மேலும் எத்தனை விவசாயிகள் நெல் வாங்கி உள்ளனர், எவ்வளவு நெல் விற்பனையானது, விவசாயிகளுக்கு உரிய விலைக்கு வழங்கியது குறித்த ரசீது வழங்கப்பட்டுள்ளதா? மொத்தம் நெல் கொள்முதல் செய்ததற்கான ஆவணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர் . இதனை அடுத்து ஈஸ்வரி 22 ஆக நெல்லை அதிகாரிகள் தரமாக இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து விதை நெல் கொடுத்த நிறுவனங்கள் நாளை விவசாய நிலங்களை பார்வையிட செல்லும்போது கண்டிப்பாக வரவேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என, விதைநெல் விற்பனை செய்த கடை உரிமையாளரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளிடம் பயிரிட்ட முறை, எவ்வளவு நாட்களில் கதிர் வந்தது என்பது குறித்து கேட்டறிந்தனர். பின் அந்த வயலில் இருந்த நெல் பயிரை சோதனை செய்வதற்காக பிடிங்கி எடுத்துச் சென்றனர். மேலும் பையூர் மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்திலிருந்து விதை ஆராய்ச்சியாளர்கள் இன்று பயிர்களை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு விதை நெல் தரம் குறித்தும், பயிரிடப்பட்ட பயிர்கள் வளர்ச்சி குறித்து தெரியவரும் என தெரிவித்தனர். மேலும் வேளாண் அலுவலர்கள் குறிப்பிட்ட கடைக்கு ஆய்வு செய்த போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடை முன் குவிந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.