மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தில் (இ-நாம்) முறையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 1 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள 1250 குவிண்டால் பருத்தியை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். குவிண்டால் அதிகபட்சமாக ரூ.12,379க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.




மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்த படியாக கரும்பு மற்றும் பருத்தி பிரதான விவசாயமாக செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 4961 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் தற்போது, பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.




இந்தாண்டு மாவட்டத்தில் முன்னதாக பருத்தி சாகுபடி செய்திருந்த விவசாயிகளின் பருத்திகள் வெடித்து விற்பனைக்கு தயாரானதால், முன்கூட்டியே விற்பனைக்கூடங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கடந்த வாரம் முதல் திறக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்களிலேயே முதல் முறையாக தேசிய வேளாண் மின்னணு சந்தைத் திட்டத்தின்கீழ் (இ-நாம்) முறையில் மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது.  2 வது வாரமாக செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனைக்குழுச் செயலாளர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தியினை விற்பனை செய்ய 250 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 




அதேபோன்று பருத்தியை கொள்முதல் செய்ய தஞ்சை, நாகப்பட்டினம், தேனி, சேலம், விழுப்புரம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து மில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். சுமார் 1 கோடிக்கு மேல் 1250 குவிண்டால் பருத்தியை வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தனர். அதிகபட்சமாக குவிண்டால் 1க்கு 12,379 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 8865 ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்சமாக 9186 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போன நிலையில், நிகழாண்டு தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்தாண்டு அதிகளவில் பருத்தி மகசூல் கொண்டுள்ளதால் விவசாயிகள் பருத்தியை அதிக அளவில் விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். 




இதனால் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் போதிய இடவசதி இல்லாததால் திறந்த வெளியில் பருத்தியை வைக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், இதனால் திடீர் மழை பொழிவு ஏற்பட்டால் நனைந்து பருத்தி பாழ் ஆகும் நிலை உள்ளது என்றும், தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விவசாயிகள் விற்பனைக்காக ஒழுங்கு முறை விற்பனை நிலையத்திற்கு கொண்டு வரும் பருத்தி மழையில் நனைந்து வீணாவதை தடுக்க ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூடுதல் வசதிகளும் பருத்தியை பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இடவசதியே ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண