தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார்.

 

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:


ஜீவகுமார் பூதலூர்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நிலத்தடி நீர் அவதாரம் குறைவாக உள்ள பகுதியாகும். இதனால் இங்கு நடப்பாண்டில் சாகுபடி பணிகள் நடக்கவில்லை. எனவே செங்கிப்பட்டி பகுதியை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும். மற்ற பகுதிகளை விட தஞ்சை பகுதியில் மழை குறைவாக பெய்துள்ளது. இங்கு ஆழ்குழாய் பாசனத்தை விவசாயிகள் நம்பியுள்ளனர். எனவே மும்முனை மின்சாரம் தடையின்றி முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாசனதாரர் சங்கத் தலைவர் ஆம்பலாப்பட்டு தங்கவேல்: ஆம்பலாப்பட்டில் உள்ள ஆண்டாள் ஏரி சுமார் 250 ஏக்கர் கொண்டது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி சுமார் 69 ஏக்கரில் நடைமுறையில் உள்ளது. இதன் வாயிலாக 1000 ஏக்கர் நிலத்திற்கு ஏரியிலிருந்து தண்ணீர் பெற்று விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினால் இன்னும் கூடுதலாக விவசாயிகள் பயன்பெறுவர்.

குருங்குளம் கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்: தமிழக அரசு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மின்கம்பம் நடப்பட்டு மின் கம்பிகள் இழுக்காமல் இருக்கிறது. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். மின்கம்பி இழுத்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும். வெட்டு கூலியை அரசே ஏற்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் கடந்த காலங்களில் வழங்கியது போல் உழவு மானியத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன்: வரும் 2024 பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்திற்கான வேளாண் உற்பத்தி பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்து மட்டுமே தவறாமல் வெளிப்படைத்தன்மையுடன் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்ளிடம் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி நிலத்தடி நீரையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். பிஎம். கிஷான் நிதி வழங்கலில் கடந்த காலங்களில் நடைபெற்ற மோசடியில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் தேங்காய் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். கபிஸ்தலம் பேங்க் ஆப் இந்தியா கிளையில் விவசாயிகள் பெயரில் வழங்கப்பட்ட போலி நகைக்கடன் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இடி, மின்னல், வெள்ளம், பாம்பு விஷக்கடி போன்றவற்றால் உயிரிழக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எஸ்.முகமது இப்ராஹிம்: தற்போது நடைபெறும் சம்பா சாகுபடிக்கு வேண்டிய அனைத்து உரங்களையும் அனைத்து கூட்டுறவு சங்கத்திலும் இருப்பில்  வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நலன் கருதி இன்சூரன்ஸ் நிறுவனங்களை தமிழக அரசே நடத்தவேண்டும். பேராவூரணி வட்டம் மறவன் வயல் மறவன் பாசன குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் ராவுத்தன் பாசனகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேராவூரணி, பட்டுகோட்டை, ஒரத்தநாடு தாலுக்காக்களில் தமிழகத்திலே அதிக அளவில் பாசன குளங்கள் ஏரிகள் உள்ளது. வருவாய் துறை அனைத்து குளங்களையும், ஏரிகளையும் அளவீடு செய்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தின் போது டெல்டா மாவட்டத்தில் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து தமிழக விவசாய சங்கத்தினர் எலும்புக்கூடு போன்று வரைந்தும் எக்ஸ்ரே படத்தை மாட்டிக் கொண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர்,  விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுகுமாரன் தலைமையில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பெருமளவு மகசூல் இழப்பை சந்தித்துள்ளது. பாதி அளவிற்குக்கூட சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடவில்லை. விவசாயிகளின் இந்த நிலைமை எலும்புக்கூடு போல் ஆகிவிட்டது எ;னறு கூறி இதை சித்தரிக்கும் வகையில் எலும்புக்கூடு வரைந்த தெர்மாகோல் மற்றும் எக்ஸ்ரே படத்துடன் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடன் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் மீது தமிழக அரசு போட்ட குண்டர் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சக்திவேல், வடக்கு மாவட்ட தலைவர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.