தஞ்சாவூர்: தமிழக அரசு தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக விவசாயிகளின் நடவடிக்கை தீவிரமடையும். விவசாயிகளின் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்கு தான் ஆதரவு அளிக்க உள்ளோம் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத விவசாயிகள் மீதான தாக்குதல், தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நிலங்களை அபகரித்து, கார்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதில் தீவிர நவடிக்கை எடுத்து வருகிறது. பரந்துார் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராடி வருகிறார்கள். 




மூத்த ஐ.ஏ.எஸ்., மச்சேந்திரநாதன் தலைமையில் குழு அமைத்துள்ளோம். அந்த குழு எடுக்கும் நடவடிக்கையின் அடிப்படையில்  விமான நிலையம் அமைப்பது குறித்து, முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியது. ஆனால், விவசாயிகள் குழுவிடம் முறையிட்டனர். குழு அறிக்கையை வெளியிடாமல் தமிழக அரசு விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி வழங்கியது கண்டிக்கத்தக்கது.


சிப்காட்டிற்கு நிலம் எடுக்கிறோம் என்ற பெயரில் சட்ட விரோதமாக தி.மு.க., அரசு போலீசாரை பயன்படுத்தி விவசாயிகள் அச்சுறுத்தி வருகிறது.  குண்டாஸ் வழக்கு போட்டு மிரட்டுகிறது. விவசாயிகளை சிறையில் வைத்து கொடுமைப்படுத்துகிறது. இதற்கு அடிப்படை நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2023 என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக விளைநிலங்களை அபரிக்க போலீசாரை பயன்படுத்துகிறது.


பா.ஜ.,வுக்கு எதிர் அரசியல் என்ற பெயரால் பல அரசியல் கட்சிகளை தி.மு.க., ஒருங்கிணைத்து உள்ள நிலையில், அந்த கட்சி விவசாயிகளுக்காக போராட்டங்களை அறிவிக்க முன்வராதது வேதனையளிக்கிறது.  


தி.மு.க., அரசின் கொடுமையை எதிர்ப்பது என்ற கொள்கையை விவசாயிகள் எடுத்துள்ளோம். விவசாயிகளான எங்களுக்கு அரசியல், கொள்கை கிடையாது. எங்களின் வாழ்க்கை மண்ணையும், விவசாயத்தை நம்பி இருக்கிறது. தமிழக அரசு தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக விவசாயிகளின் நடவடிக்கை தீவிரமடையும். விவசாயிகளின் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்கு தான் ஆதரவு அளிக்க உள்ளோம். தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இன்று வரை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.


வரும் கொள்முதல் பருவத்தில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க நிறுவனங்களுக்கு தி.மு.க., அரசு இடம் அளிக்கிறது. இதை நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி வரும் ஜனவரி 1ம் தேதி பிரச்சார இயக்கத்தை துவங்க உள்ளோம். வரும் ஜனவரி 5ம் தேதி திருவாரூரில் பிரச்சார பயணம் நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.