பருத்திக்கு பின் இரண்டாவது பெரிய விவசாயம் சார்ந்த தொழிலாகவும் இந்திய அளவில் 500க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகளின் மூலப் பொருளாகவும் கரும்பு விளங்குகிறது. தமிழ்நாடு கரும்பு உற்பத்தி திறனில் முதலிடம் வகிக்கிறது. கரும்பு பயிரிலிருந்து சர்க்கரை, வெல்லம் போன்ற இனிப்பு பொருட்கள் எடுக்கப்படுகிறது.



நாட்டின் முக்கிய தேவையான மின்சாரம், வாகன எரிபொருள்கள் அளிப்பதில் கரும்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. கரும்பு சக்கை மின்சாரம் மற்றும் காகிதம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே நவீன சாகுபடி முறைகளை மேற்கொண்டு கரும்பு உற்பத்தியை உயர்த்தவும், லாபத்தை இரட்டிப்பாக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனைகள் வழங்கி உள்ளது.


பருவம்: கரும்பு பயிர் முன் பட்டம் (டிசம்பர்- ஜனவரி), நடுப்பட்டம் (பிப்ரவரி –மார்ச்) பின் பட்டம் (ஏப்ரல் – மே), சிறப்பு பட்டம் (ஜூன்- ஜூலை) ஆகிய பருவங்களில் பயிரிடப்படுகிறது கரும்பு சாகுபடியில் உற்பத்தி செலவை குறைத்து கரும்பு வயதில் ஒரு மாத காலம் சேமித்து தண்ணீர் தேவையை சுமார் 40% குறைத்து களை எடுத்தல், மண் அணைத்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்ற வேலைகளை இயந்திரங்களை பயன்படுத்தி செய்யலாம். ஊடு பயிர் சாகுபடி செய்து அதிலே வருவாய் கிடைப்பதற்காக கரும்பு கருணைகள் நடவுக்கு பதிலாக சுமார் ஒரு மாதம் வயதுடைய ஒற்றைபரு சீவல் மூலம் கரும்பு நாற்றுக்களை குழித்தட்டு முறையில் வளர்த்து நடவு செய்யும் முறை நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறையாகும்.

முக்கிய காரணிகள்:

ஒரு விதைப்பரு சீவல்களில் இருந்து நாற்றங்கால் தயாரித்தல். இளம் 25,35 நாட்கள் வயதான நாற்றுகளை எடுத்து நடவு செய்தல். நடவின்போது வரிசைக்கு வரிசை குறைந்தது 5 அடி இடைவெளியும் நாற்றுக்கு நாற்று இரண்டு அடி இடைவெளியும் பராமரித்தல்.

நீர் பாய்ச்சும் போது ஈரப்பதம் மட்டுமே இருக்குமாறு பாய்ச்ச வேண்டும். இயற்கை உரங்கள், பயிர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 400  கிலோ விதை கரும்பு போதுமானது. குறிப்பாக 50- 60 கிலோ தண்டு பரு சீவல் மட்டும் குழித்தண்டு நாற்றுகள் தயாரிக்க போதுமானது. ஒரு ஏக்கருக்கு 4400 நாற்றுக்கள் தேவை. 25 முதல் 30 நாட்கள் வயது நாற்றுக்களை நட வேண்டும். சொட்டு நீர் பாசனம் அமைப்பதால் நீர் 40% சேமிக்கப்படுகிறது.


தண்டுபரு நாற்றங்கால்:

ஒரு ஏக்கருக்கு ஐம்பது குழியுள்ள 100 தட்டுகள் அல்லது 70 குழியுள்ள 71 தட்டுகள் தேவைப்படும். தண்டு பரு சீவல் விதை நேர்த்திக்கு 10 கிராம் பவிஸ்டன், 100 கிராம் யூரியா, 40 மில்லி லிட்டர் மாலத்தியான் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 5000 விதைப்பரு கரணைகளை 15 நிமிடம் ஊற வைத்து நடவு செய்ய வேண்டும்.

தண்டுபரு நடவு செய்த குளித்தட்டுகளை காற்று மற்றும் சூரிய ஒளி புகாத வண்ணம் பிளாஸ்டிக் உறை மூலம் இறுக்கமாக கட்டி 5 நாட்கள் வரை மூட்டம் போட வேண்டு.ம் பின்பு உறைகளைப் பிரித்துப் பார்த்தால் பருத்தல் முளைத்திருக்கும். குழித்தட்டில் நடவு செய்த 15 நாட்களுக்குப் பிறகு 19: 19:19 சதம் தழை,  மணி, சாம்பல் சத்து அடங்கிய நீரில் கரையும் உரத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்கிற அளவில் தெளித்து வளமான நாட்டுக்களை பெறலாம். டிரைக்கோ டெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் தலா ஒரு கிலோ இயற்கை உரம் கலந்து இட வேண்டும்.

செவ்வக நடவு:

ஒரு குத்துக்கு ஒரு நாற்று. நாற்றின் வயது 25 -30 நாட்கள். குழித்தட்டில் இருந்து தண்டு பகுதி நாற்றுக்கள் எடுக்கும் முன் ஒரு நாள் முன்பாக நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். தூர்கள் அதிகம் பெற இரண்டு தூர்கள் வந்த பிறகு தாய் நாற்றை கிள்ளிவிட்டால் அதிக தூர்கள் வெடிக்கும்.

சொட்டுநீர் பாசனம்:

சொட்டுநீர் பாசனம் மூலம் 50% நீரை மிச்சப்படுத்தலாம். 10 நாட்கள் இடைவெளியில் 260 நாட்களுக்கு சொட்டு நீர் முறையில் உரங்கள் இடலாம்.

களை நிர்வாகம்:

கரும்பு தனிப்பயிராக இருந்தால் நாட்டு நடவு செய்த 3வது நாள் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அட்ரஸின் அல்லது 600 கிராம் மெட்ரிபூசின் களைக்கொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். இடைவெளி அதிகமாக இருந்தால் பவர் டில்லர் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம்.

மகசூல்:

ஒரு ஏக்கருக்கு 4440  நாற்றுக்கள் நட்டும் போது 90 சதவீதம் பிழைக்கும் என கொண்டால் ஒரு ஏக்கருக்கு 3960 குத்துக்கள் இருக்கும். ஒரு குத்துக்கும் 12 கரும்புகள் வீதம் 47 520 கரும்புகள் வயலில் இருக்கும். ஒரு கரும்பின் எடை 1.6 கிலோ இருக்கும். ஆக ஒரு ஏக்கருக்கு 76 டன் அளவில் கரும்பு விளைச்சல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை நிகர லாபம் கிடைக்கும்.