குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை செய்த விவசாயிகளின் பருத்திக்கான பணம் சுமார் 1கோடியே 38 லட்சம் ரூபாயை அவர்களுக்கு வழங்கவில்லை என கூறி  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா கடைமடை பகுதிகளில் கடைமடை மாவட்டமாக இருந்து வருகிறது மயிலாடுதுறை மாவட்டம். இங்கு மீன்பிடி  தொழிலும், விவசாயமும் பிரதானமாக செய்யப்படுகிறது. குறிப்பாக நெல்லும் நெல்லுக்கு  அடுத்தபடியாக விவசாயிகள் பருத்தி சாகுபடியிலும் ஈடுபட்டுகின்றனர். மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோயில் ஆகிய 4 இடங்களில் வேளாண் விற்பனைக்குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 




இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மயிலாடுதுறை மாவட்டம்  மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் சாகுபடி செய்த பருத்தியை கொண்டு வந்து இங்கு நடைபெறும் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில்,  மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநில மில் அதிபர்களாலும், தேனி, கோவை, சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர்,  திருவாரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்ட மில் அதிபர்கள், வணிகர்களாலும் பருத்தி கொள்முதல் செய்து வருகின்றனர்.


Chennai Flood: மிரட்டும் புயலால் இன்று முதல் டிச.9 வரையான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலை. அறிவிப்பு




அந்த வகையில், குத்தாலம் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 2022 - 23 ஆம் ஆண்டுக்கான கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே பருத்திக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கான பணம் இதுநாள் வரை அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பணத்தை கேட்டும் சென்றுள்ளனர்.  அதற்கு அதிகாரிகள் இரண்டு நாட்களில் வந்துவிடும், ஒரு வார காலங்களில் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அலட்சியமா கூறி அனுப்பி உள்ளனர்.




இதனை கேட்டு ஆத்திரமடைந்த பருத்தி விவசாயிகள் தங்கள் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை என சுமார் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் வரை பணம் வர வேண்டி உள்ளதென கூறி, பருத்தி ஏலம் விற்பனை செய்ததற்கான டோக்கனை கையில் வைத்துக்கொண்டு இன்று குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் பணம் எப்போதும் வரவு வைக்கப்படும் என்று கேட்டு அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த குத்தாலம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பருத்திக்கான பணம் அவர் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்ற ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.