மிரட்டும் மிக்ஜாக் புயலால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


மிக்ஜாம் புயல் அதன் தாக்குதலை தொடங்கி விட்ட நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பியுள்ளன என தமிழக நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


நாளை பொது விடுமுறை


முன்னதாக மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 5.12.2023 நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.


இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் வழங்கப்படும் ரெகுலர் மற்றும் தொலைதூரப் படிப்புகளுக்கு இன்று (டிச.3) முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன. 


தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


எனினும் கன மழை காரணமாக, தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இதற்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.