தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றில் முறையிட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் தங்களது தேவைக்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் சூழல் இல்லை என்று கர்நாடகா கூறி வருகிறது. இதற்கிடையே டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இக்கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தமிழகம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் கேட்டபோது எங்களிடம் சொற்ப அளவு தண்ணீர் இருந்தாலும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டோம். அதன்படி 5 ஆயிரம், 3 ஆயிரம் கனஅடி என எங்களால் இயன்ற அளவுக்கு திறக்கப்பட்டது. தற்போது தண்ணீர் திறந்து விடுவதற்கான சாத்தியமே இல்லை. எங்களுக்கே 120 டி.எம்.சி.க்கு மேல் தேவைப்படுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இதை கருத்தில் கொள்ளாமல், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே காவிரி படுகை பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தர கோரி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்கத் பொறுப்பாளர் சிம்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், காவிரியில் கர்நாடகம் வழங்க வேண்டிய சட்டரீதியான தண்ணீரை உடனடியாக திறந்திட உச்சிநீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து உடன் உத்திரவிட வேண்டும், குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், காவிரியில் தமிழகத்துக்கு மாதவாரியாக தண்ணீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக அரசு மறுத்தால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தண்ணீர் வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை டிஎல்சி பள்ளி அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து விவசாயிகள் பேரணியாக வந்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி, நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம், உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சார்ந்த விவசாயிகள், கட்சியினர் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு இன்று ஒரு நாள் தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.