தஞ்சாவூர்: காவிரியில் உரிய நீரை வழங்க கோரியும்,  கர்நாடக மற்றும் காவிரி நீர் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூரில ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 


காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12 ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன.


ஆனால், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இயற்கை கை கொடுத்தாலோ, உச்சநீதிமன்றம் நீதி வழங்கினாலோ, குறுவை பயிர்களை பெரிய அளவில் பாதிப்பின்றி காப்பாற்றி விடலாம் என்று விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் எல்லா வாய்ப்புகளும் நழுவி விட்டன; நம்பிக்கைகள் பொய்த்து விட்டன.


இந்நிலையில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி தொடங்க முடியாத நிலை உள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். கடன் வாங்கி குறுவை சாகுபடி செய்து விட்டு வயல் காய்ந்து வருவதை கண்டு விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.




இதனால் உரிய நீரை வழங்க கோரியும், கர்நாடக மற்றும் காவிரி நீர் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


ரயில் மறியல் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற உடனடியாக உரிய நீரை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்துடனான செயல்பாட்டை முடக்க கூடாது . மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்க கூடாது.


விதிமுறைகளை மீறும் கர்நாடகா மற்றும் உரிய நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியவாறே ரயிலை மறித்து போராட்டம் நடத்துவதற்காக தஞ்சை  ரயில் நிலையத்துக்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த  போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.


அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில விவசாயிகள் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து தண்டவாளத்தில் நின்று கோஷமிட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ரெயிலை மறிக்க முயன்றதாக காவிரி விவசாய சங்க நிர்வாகிகள் 75-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.