புதுச்சேரி: புதுவை சட்டபேரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாஜக எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் சட்டப்பேரவை படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சமாதானப்படுத்தி தன் அறைக்கு அழைத்து சென்றார். இதனால் சட்டப்பேரவை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. 9.37 மணிக்கு சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது.

Continues below advertisement

சட்டசபைக்கூட்டம்:

முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து பேசினர். எதிர்க்கட்சித்தலைவர் சிவா, மகளிருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்தாதது, தொகுதியளவில் நடைபெற வேண்டிய பணிகள், மக்கள் நல பணிகளை செயல்படுத்தாதது ஆகியவை குறித்து சபையில் விவாதிக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தலைமை செயலாளரும், அதிகாரிகளும்தான் காரணம் என கூறுகின்றனர். அதுகுறித்தும் விவாதிக்க வேண்டும் என கூறினார். இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, அலுவல் முடிந்தவுடன் பேச அனுமதிப்பதாகவும், உறுப்பினர்கள் அனைவரும் அமரும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.  சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி எதிர்கட்சித்தலைவர் சிவா வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

Continues below advertisement

மீண்டும் சர்ச்சை:

 இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி20 மாநாடை வெற்றிகரமாக நடத்தியுள்ளதற்கும் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஆகியவற்றுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். அப்போது மீண்டும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிவா தலைமையில் சபைக்கு வந்தனர். அவர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று, அலுவல் பட்டியலில் இல்லாததை எப்படி பேசலாம் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு சபாநாயகர், நன்றி அறிவிப்பு அலுவல் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்தார். இதனால் சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டபேரவையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

தொடர்ந்து 2023-ம் ஆண்டு புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழத்தலை தடுத்தல் திருத்த சட்ட முன்வரைவை அமைச்சர் லட்சுமிநாராயணனும், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த முன்வரைவை முதல்வர் ரங்கசாமியும் தாக்கல் செய்தனர். இந்த மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சபையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.