தஞ்சாவூர்: தஞ்சை அருகே மடிகை பகுதியில் நாற்றாங்காலை தயார் செய்து கோடை சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வர்.
குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் முடிந்து விட்டது. கோடை உழவுக்காக விவசாயிகள் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் வேளாண்மை ஆகும். கோடை காலத்தில் மழை குறைவாக இருக்கும். கால்வாய்ப் பாசன வசதி பெறும் ஊர்களில் கால்வாயிலும் நீர் வரத்து இருக்காது. சிற்றூர்களில் கிணற்றுப் பாசன வசதி உள்ளவர்கள் மட்டுமே கோடை உழவு செய்ய முடியும். மற்றவர்கள் நிலத்தைத் தரிசாக விடுவர். சிலர் தரிசாக இருக்கும் நிலத்தில் மானாவாரிப் பயிர்கள் இடுவர். எள், பயறு வகைகள், கேழ்வரகு, குதிரைவாலி போன்றவை கோடை விவசாயத்தில் பயிரிடப்படுகின்றன.
கோடை உழவு செய்வது மண்வளத்தை அதிகரிக்கும். அடுத்த சாகுபடிக்கான உரத்தேவையைக் குறைக்கும். நீரை நிலத்தில் தக்க வைக்கும். பூச்சித் தொல்லையைக் குறைக்கும். கோடை உழவு செய்வதால் பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கோடை உழவு செய்யப்படாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டங்களும் விரயமாகும். கோடை உழவில் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் சேகரிக்கப்படுவதால் நிலப்பரப்பின் கீழ் ஈரப்பதம் காத்து பூச்சிகள், மற்றும் பூஞ்சானங்கள் கட்டுப்படுகிறது.
கோடை உழவு செய்வதால் முன் பருவ விதைப்புக்கு ஏதுவாகிறது, ஏற்கனவே உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாவதோடு, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் கூடுவதோடு விளைச்சலும் அதிகரிப்பதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளது. தற்போது தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக கோடை உழவு செய்யப்பட்டு வருகிறது. நாற்றங்கால் விட்டு விவசாயிகள் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம், அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, மேல உளூர், ஆழிய வாய்க்கால், நத்தம் உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் கோடை உழவை மேற்கொண்டுள்ளனர். இதில் தஞ்சை அருகே மடிகை பகுதியில் நாற்றங்காலில் நாற்று பறிக்கும் பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.
தஞ்சை அருகே மடிகையில் கோடை உழவுக்காக நாற்றங்கால் பணிகளில் விவசாயிகள் மும்முரம்
என்.நாகராஜன்
Updated at:
10 Apr 2023 12:33 PM (IST)
கோடை உழவு செய்வதால் முன் பருவ விதைப்புக்கு ஏதுவாகிறது, ஏற்கனவே உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாவதோடு, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் கூடுவதோடு விளைச்சலும் அதிகரிக்கிறது.
விவசாயிகள்
NEXT
PREV
Published at:
10 Apr 2023 12:33 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -